பிராட்டியின் பழைய நினைவுகள்

கலி விருத்தம்

5087.

'தெவ் மடங்கிய சேண் நிலம்' -- கேகயர்
தம் மடந்தை --'உம் தம்பியது ஆம்' என,
மும் மடங்குபொலிந்த முகத்தினன்
வெம் மடங்கலைஉன்னி, வெதும்புவாள்.

     கேகயர்தம்மடந்தை - கேகய அரசனின் மகளானகைகேசி; தெவ்
மடங்கிய -
பகைவர்கள் புற முதுகு காட்டி ஓடும்படி; (வீரம் பெற்ற)
சேண்நிலம் - பரந்த கோசல நாடு; உன் தம்பியது ஆம்என - உன்
தம்பியான பரதனுக்கே உரியது என்று கூற; மும்மடங்கு பொலிந்த
முகத்தினன் -
(இயல்பான நிலையினும்) மூன்று மடங்கு பொலிவாக விளங்கிய
முகத்தைப் பெற்ற; வெம் மடங்கலை - யாவரும் விரும்பும் சிங்கம் போலும்
இராமபிரானை; உன்னி - நினைந்து; வெதும்புவாள் - (துன்பத்தால்) வெப்பம்
அடைவாள்.

     மும்மடங்குபொலிந்தன (யுத்த) என்னும் பகுதியைக் கருதுக.
இக்கலிவிருத்தம் மா-விளம்-விளம்-விளம் என்னும் 4 சீர்களைப் பெற்று வரும்.
இதனை 'அளவியற் சந்தம்' என்று கம்பன் அடிப்பொடி அவர்கள்
குறிக்கிறார்கள். இத்தகைய பாடல்கள்இந்நூலில் 1198 உள்ளன.         (19)