5095. | மழுவின்வாளினன், மன்னரை மூ - எழு பொழுதில் நூறி,புலவு உறு புண்ணின் நீர் முழுகினான் தவமொய்ம்பொடு மூரி வில் தழுவும் மேன்மைநினைந்து, உயிர் சாம்புவாள். |
மன்னரை -அரசர்களை; மூவெழு பொழுதில் - இருபத்தொரு தலைமுறையில்; நூறி - கொன்று; புலவு உறு புண்ணின் நீர் - புலால் கமழும் இரத்தத்தில்; முழுகினான் - நீராடிய; மழுவின் வாளினன் - மழுவாகிய ஆயுதம் ஏந்திய பரசுராமனின்; தவம் - தவத்தையும்; மொய்ம்பொடு - வலிமையையும்; மூரிவில் - பெரிய வில்லையும்; தழுவும் மேன்மை - தழுவிக் கொண்ட சிறப்பை; நினைந்து - எண்ணி; உயிர்சாம்புவாள் - உயிர் வாடுவாள். மழுவின் வாளினன்- என்பதில் உள்ள இன் அசை காப்பு ஒப்பு என்று கூற வேண்டியதைக் காப்பின் ஒப்பின் என்று கூறினர் தொல்காப்பியர் (வேற்றுமை 117) மழுவாளியர் என்பாரும் உளர் 'மழுவாளவன் இழுக்கம்' - என்பது கம்பன் வாக்கு (கம்ப. 1354.) இன் என்பது உருபாயின் இடர்பட்டுப் பொருள் கொள்ள நேரும். வி.கோ, மழுவாயுதத்தை உடையவராய்' என்றே உரை கூறினார். மொய்ம்பொடு என்பதில் உள்ள 'ஒடு' தவம், மூவரில் என்பவற்றுடன் சேர்க்கவும். மழுவின் வாளின் நன்மன்னரை என்று பிரித்துப் பொருள் கோடல் எளிது. வாளில் நன்மன்னரை நூறி முழுகின பரசுராமன் என்றும் பொருள் தரும். அப்போது முழுகினான் - வினையால் அணையும் பெயர். முழுகினான் - வினையால் அணையும் பெயர். முழுகினான் வாளினன் என்று இசையும், முழுகினான் என்னும் தெரிநிலைவினைமுற்று பெயரெச்சமாக வந்தது (நன் - புறனடை) (27) |