5103.

'நஞ்சு அனையான், வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள்,வலம் துடித்த; வாய்மையால்
எஞ்சல; ஈண்டுதாம் இடம் துடிக்குமால்;
"அஞ்சல்" என்றுஇரங்குவாய்! அடுப்பது யாது ?'
                                   என்றாள்.

     அஞ்சல் என்றுஇரங்குவாய் - பயப்படாதே என்று கருணை
காட்டுபவளே ! நஞ்சு அனையான் - விடம் போன்ற இராவணன்; வனத்து -
காட்டிலே; வஞ்சனை இழைக்க - வஞ்சகத்தைப் புரிய எண்ணி; நண்ணிய
நாள்  -
(பஞ்சவடியை) அடைந்த அன்று; வலம் துடித்த - வலப்புற
அங்கங்கள் துடித்தன; வாய்மையால் - (இத்துடிப்பு நிகழ்ச்சிகள் நன்மை
தீமை) உண்மையால் உணர்த்தும்; ஈண்டு - இப்போது; எஞ்சல -
குறைவில்லாதன; இடம் துடிக்கும் - இடப்புறத்து அங்கங்கள் துடிக்கும்;
அடுப்பது யாது -
என்னை வந்து அடையும் நன்மை யாது; என்றாள் -
என்று கூறினாள்.

    இரங்குவாய்என்பது திரிசடையை நோக்கிய விளி. வாய்மை - ஆல்,
துடிக்கும் ஆல் - ஆல்கள் - அசை. வலம் துடித்த வாய்மையால் என்று
சேர்த்துப் பொருள் கூறுவாரும் உளர்.                           (35)