திரிசடை நற்குறிப்பயன் கூறுதல் 5104. | என்றலும்,திரிசடை, 'இயைந்த சோபனம் ! நன்று இது ! நன்று!' எனா, நயந்த சிந்தையாள், 'உன் துணைக்கணவனை உறுதல் உண்மையால்; அன்றியும்,கேட்டி' என்று, அறைதல் மேயினாள். |
என்றலும் -என்றுபிராட்டி கூறியதும்; நயந்த சிந்தையாள் - அன்பு நிரம்பிய உள்ளமுடைய; திரிசடை - திரிசடையானவள் (பிராட்டியை நோக்கி); சோபனம் இயைந்த - (உனக்கு) மங்களங்கள் வந்துள்ளன; இது நன்று நன்று - இக் குறி நல்லது நல்லது; எனா - என்று கூறி வாழ்த்தி; உன் துணைக் கணவனை - உன்னுடைய துணைவனான நாயகனை; உறுவது உண்மை - அடைவது சத்தியம்; அன்றியும் - அல்லாமலும்; கேட்டி என்று - யான் கூறுவதைக் கேள் என்று;அறைதல் மேயினாள் - சொல்லத் தொடங்கினாள். சிந்தையாள் -குறிப்புமுற்று, பெயரெச்சமாய் திரிசடை என்னும் பெயர் கொண்டது. அன்றி, சிந்தையை உடையவளாய் அறைதல் மேயினாள் என்று கூறுதலும் நன்று. (உண்மை) ஆல். அசை. சோபனம் - மங்களச் சொல் 'ஏழை சோபனம்' என்பது அனுமன் வாழ்த்து (கம்ப. 9967.) (36) |