5111. | 'பிடி மதம்பிறந்தன; பிறங்கு பேரியும், இடி எனமுழங்குமால், இரட்டல் இன்றியே; தடியுடைமுகிற்குலம் இன்றி, தா இல் வான் வெடிபடஅதிருமால்; உதிரும், மீன் எலாம். |
பிடி - பெண் யானைகட்கு;மதம் பிறந்தன - மதப் புனல் தோன்றின; பிறங்கு பேரியும் - விளக்கமான பெரு முரசங்களும்; இரட்டல் இன்றியே - (வீரர்களால்) மாறி மாறி அடிக்கப்படாமல்; இடியென முழங்கும் - இடியைப் போல (தாமே) முழங்கும்; தடி உடை முகிற் குலம் இன்றி - மின்னலுடன் கூடிய மேகக் கூட்டம் இல்லாமலேயே; தாவு இல் வான் - நீக்கம் அற்ற ஆகாயம்; வெடி பட அதிரும் - (அண்டங்கள்) பிளவு படும்படி அதிரும்; மின் எலாம் உதிரும் - எல்லா நட்சத்திரங்களும் சிதறி விழும். 'பிடியெலாம்மதம் பெய்திட ... வான் இடியும் வீழ்ந்திடும்' (கம்ப. 2946) தாவு இல் - நீக்கம் அற்ற. 'யானை தாவரும் திசையில் நின்று சலித்திட' (கம்ப. 7328) இரண்டு கோல்களால் மாறி மாறி அடிப்பதை இரட்டல் என்பர். (43) |