5118. | என்றனள்இயம்பி, 'வேறு இன்னும் கேட்டியால், இன்று, இவண்,இப்பொழுது, இயைந்தது ஓர் கனா; வன் துணைக்கோள்அரி இரண்டு மாறு இலாக் குன்றிடைஉழுவைஅம் குழுக் கொண்டு ஈண்டியே, |
என்றனள் இயம்பி- என்றுகூறி (திரிசடை); வேறு - வேறுபட்ட; ஓர் கனா, இன்னும் கேட்டி - ஒரு கனவுக் காட்சியை மேலும் கேள் (அக்காட்சி); இன்று இவண் இப்பொழுது - இன்றைத் தினத்தில் இவ்விடத்தில் இச்சமயத்தில்; இயைந்தது - உண்டாகியது; வன் - வலிமை மிக்க; துணை - ஒன்றற்கொன்று துணையாயிருக்கும்; இரண்டு கோள் அரி - இரட்டைச் சிங்கங்கள்; குன்றிடை - மலையின் கண்ணே (இருந்த); மாறு இலா - தமக்குள் கருத்து வேறுபாடில்லாத; உழுவை குழுக் கொண்டு - புலிக்கூட்டத்தைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு; ஈண்டி - (இலங்கையில்) நெருங்கி. இம் மண் உலகில்செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் (திருவாய் -3-96) என்ற இடத்தில் உலகில் செல்வர் இல்லை. இப்போது நோக்கினோம் என்றுகூட்டிப் பொருள் செய்த நம்பிள்ளையை உள்ளுக. கவிதை கிடந்தபடியே பொருள் கொள்வதில் இடர்ப்பாடுகள் பலவுள. (50) |