5121.

'பொன் மனை புக்க அப் பொரு இல் போதினில்,
என்னை நீஉணர்த்தினை; முடிந்தது இல்' என,

'அன்னையே !அதன் குறை காண்' என்று, ஆயிழை,
'இன்னமும்துயில்க' என, இரு கை கூப்பினாள்.

     பொன்மனை புக்கஅப் பொருஇல் போதினில் - (அச்செய்யவள் )
வீடணனின் அரண்மனை அடைந்த ஒப்பற்ற சமயத்தில்; நீ என்னை
உணர்த்தினை -
நீ என்னை எழுப்பினாய்; முடிந்தது 'இல்' என -
அக்கனவு நிறைவு பெறவில்லை என்று கூற; ஆயிழை - பிராட்டி;
அன்னையே - தாயே; அதன் குறை காண் என்று - அக்கனவின் குறைப்
பகுதியைப் பார் என்று பிராட்டி; இன்னமும் துயில்க என - மேலும்
உறங்குக என்று கூறி; இரு கை கூப்பினாள் - இரண்டு கரங்களையும்
குவித்தாள்.

    பொன் என்பதைஎழுவாயாக்கி, இராச்சிய லட்சுமி வீடணனின்
கோயிலுக்குப் புகுந்த சமயத்தில் என்றும் கூறலாம். 'என்று', 'என' என்று
மேற்கோள் குறியீட்டுச் சொற்கள் இரண்டு முறை வந்துள்ளன. 25 ஆம் பிரதி'
அதன் குறை காணுதற்கு நீ என்னும் பாடத்தைத் தருகிறது. ஏற்பின் நன்று.(53)