அரக்கியர் நடுவில்இருப்பவள் சீதையே என அனுமன் தெளிதல்

5133.

'எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,
வள்ளல் தன்உரையொடு மாறு கொண்டில,
கள்ள வாள் அரக்கன் அக் கமலக் கண்ணனார்
உள்உறை உயிரினைஒளித்து வைத்தவா !

(அரக்கியர் நடுவில்இருப்பவர் பால்)

    எள் அரும் -பழிப்பற்ற; உருவின் - திருமேனியின்கண்; அவ்
இலக்கணங்களும் -
நல்ல சாமுத்திரிகா லட்சணங்களும்; வள்ளல் தன்
உரையொடு -
இராமனின் மொழிகளோடு; மாறு கொண்டில -
வேறுபட்டிருக்கவில்லை. (ஆகையால் இவள் சீதையே); கள்ளவாள் அரக்கன்
-
வஞ்சனையும் கொடுமையுமுடைய இராவணன்; அக்கமலக் கண்ணனார் -
அந்த தாமரை போன்ற கண்களைப் பெற்ற இராமபிரான்; உள் உறை
உயிரினை -
உள்ளத்தில் வாழும் உயிரை; ஒளித்து வைத்தவா - மறைத்து
வைத்த கொடுமை எப்படிப்பட்டது.

    வைத்த ஆறு என்பதுவைத்தவா எனக் குறைந்து வந்துள்ளது 'என்னே
நிருபன் இயற்கை இருந்தவா' (கம்ப, 1713)                          (65)