5137.

'புனை கழல்இராகவன் பொன் புயத்தையோ ?
வனிதையர்திலகத்தின் மனத்தின் மாண்பையோ ?
வனை கழல்அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர்தம்குலத்தையோ ? யாதைச் சாற்றுகேன் ?

     கழல்புனை -வீரக்கழல் அணிந்த; இராகவன் பொன் புயத்தையோ -இராமபிரானின் அழகிய தோள்களையே ? வனிதையர் திலகத்தின் -
பெண்களின் திலகம் போன்ற பிராட்டியின்; மனத்தின் மாண்பையோ -
திருவுள்ளத்தின் மாட்சிமையையோ ? கழல் வனை - வீரக்கழல் அணிந்த;
அரசரின் - அரசர்களுக்குள்ளே; வண்மை மிக்கிடும் - கொடைப்பண்பால்
உயர்ந்த; சனகர்தம் குலத்தையோ - சனகரின் குலத்தையோ; யாதைச்
சாற்றுகேன் -
எதைப் புகழ்வேன்.

    ஒன்றின் ஒன்றுவிஞ்சி இருத்தலின் யான் எதைப் புகழ்வேன் என்றான்.
என்றாலும் மரபினும் புயம் உயர்ந்தது. புயத்தினும் மனம் உயர்ந்தது என்பதை
அறிக.                                                     (69)