| 5138. | 'தேவரும் பிழைத்திலர்; தெய்வ வேதியர் ஏவரும்பிழைத்திலர்; அறமும் ஈறு இன்றால்; யாவது இங்குஇனிச் செயல் அரியது, எம்பிராற்கு? ஆவ ! என்அடிமையும் பிழைப்பு இன்றாம்அரோ. |
தேவரும்பிழைத்திலர் - தேவர்களும் பிழைசெய்திலர்; தெய்வ வேதியர் ஏவரும் - தெய்வத் தன்மையுடைய எந்த வேதியரும்; பிழைத்திலர் - பிழை செய்திலர்; என் அடிமையும் - என்னுடைய அடிமைப் பணியும்; பிழைப்பு இன்றாம் - பிழையற்றுள்ளது (ஆதலால்); இனி - இனிமேல்; அறமும் ஈறு இன்று - தருமமும் அழியாது. எம் பிராற்குஇங்கு - எம்பெருமானாகிய இராமபிரானுக்கு இவ்விடத்தில் இனி செயல் அரியது யாவது - செய்யவியலாத செயல் எது ? தேவரும் வேதியரும் தொண்டும் பிழையா இடத்தே அறம் அழியாது. அறம் அழியா இடத்தில் தெய்வம் வெளிப்பட்டு அருளும் என்பது கருத்து. ஆவ - வியப்புக்குறிப்பு. அரோ - அசை. (70) |