5139.

"கேழ் இலாள் நிறை இறை கீண்டதாம்எனின்,
ஆழியான் முனிவுஎனும் ஆழி மீக்கொள,
ஊழியின் இறுதிவந்துறும்" என்று உன்னினேன்;
வாழிய உலகு, இனிவரம்பு இல் நாள் எலாம் !

     கேழ் இலாள் -ஒப்புமையற்ற பிராட்டியின்; நிறை இறை கீண்டது
ஆம் எனில் -
நிறையானது சிறிது சிதைந்தாலும்; ஆழியான் - (சக்கரம்
ஏந்திய) திருமாலாகிய இராமபிரானின்; முனிவு எனும் ஆழி - கோபம்
என்னும் கடலானது; மீகொள - மேலே அதிகரித்துப் பொங்குதலால்;
ஊழியின் இறுதி - யுகத்தின் முடிவுக்காலம்; வந்து உறும் என்று - வந்து
விடுமே என்று; உன்னினேன் - எண்ணி அஞ்சினேன் (நிறை
அழியாமையால்); இனி - இனிமேல்; உலகு - உலகங்கள்; வரம்பு இ்ல்
நாள்எலாம் -
எல்லையற்ற எல்லா நாட்களிலும்; வாழிய - வாழ்வடைக.

     நிறை -மனத்தைக் கட்டுப்படுத்தல். இறைவன் கோபம் கொள்ளாமல்
'பிராட்டி அடக்கி வெல்வாள்' என்று கூறுவர் சிலர். நிறை
 - கரை
போன்றது.அன்றியும் மகளிரின் நால்வகைப் பண்புகளில் ஒன்றான
நிறை என்றும் கூறலாம். கீண்டது ஆம் என்று - ஆம் அசை. உன்னுதல் -
அஞ்சுதல். காரியத்தைக் காரணமாகக் கூறப்பெற்றது.                 (71)