5141. | 'பேண நோற்றது மனைப் பிறவி, பெண்மைபோல் நாணம் நோற்றுஉயர்ந்தது, நங்கை தோன்றலால்; மாண நோற்று,ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் காணநோற்றிலன், அவன் கமலக் கண்களால் ! |
நங்கைதோன்றலால் - பிராட்டி உலகில்அவதரித்ததால்; மனைப் பிறவி - உயர்ந்த குலப்பிறப்பானது; பேண - மற்றவர்கள் மதிக்கும் படி; நோற்றது - தவம் செய்தது; பெண்மை போல் - பெண் தன்மையைப் போல; நாணம் - (மகளிரின்) நாணமானது; நோற்று உயர்ந்தது - தவஞ்செய்து சிறப்பைப் பெற்றது (ஆனால்); ஈண்டு - இந்த இலங்கையில்; இவள் - இந்தப் பிராட்டி; மாண நோற்று - மாண்படையத் தவம் செய்து (கற்பைக் காத்து); இருந்த ஆறு எலாம் - இருந்த பண்பின் முழுமையையும்; அவன் - அந்த இராமபிரான்; கமலக் கண்களால் -தாமரைபோன்ற கண்களினாலே; காண நோற்றிலன் -காண்பதற்குத் தவம் செய்தானில்லையே. கமலக் கண்களேகாண நோற்றில என்னும் பாடம் சிறக்கும் போலும். பிராட்டியின் தொடர்புடைய மனைப் பிறவி முதலானவை உயர்ந்தன ஆனால் இராவணனுடன் வாழும் கண்கள் தவம் செய்யவில்லையே என்னும் பொருள் நன்று போலும். கமலக் கண்கள் நோற்றில என்பதில் அருமைப்பாடுள்ளது. திறனாய்வுப் புயலில் இது சிதையினும் சிதையும் இது கம்ப சூத்திரம். நான் காண நோற்றேன் என்ற அநுமன் பெருமிதம் உள்ளுறை. (73) |