இராவணன் அங்கேதோன்றுதல் 5145. | என்று, இவைஇனையன எண்ணி, வண்ண வான் பொன் திணி நெடுமரப் பொதும்பர் புக்கு, அவண் நின்றனன்; அவ்வழி நிகழ்ந்தது என் எனின், துன்று பூஞ்சோலைவாய் அரக்கன் தோன்றினான். |
(அனுமன்) என்று - என; இவை -இவற்றையும்; இனையன - இவை போன்றவற்றையும்; எண்ணி - நினைத்து; வண்ணம் - அழகியதும்; வான் - உயர்ந்ததும் (ஆகிய); பொன் - பொன்னால் அமையப் பெற்றதும்; திணி - செறிவுடையதும் (ஆகிய); நெடுமரப் பொதும்பர் - பெரிய மரச் செறிவில்; புக்கு - புகுந்து; அவண் - அவ்விடத்தில் (மறைந்து); நின்றனன் - நின்றான்; அவ்வழி - அவ்விடத்தில்; நிகழ்ந்தது - நடந்தது; என் எனின் - என்ன வென்றால்; பூ துன்று - மலர்கள் நெருங்கிய; சோலைவாய் - சோலையின்கண் (அனுமனுக்கு); அரக்கன் தோன்றினான் - இராவணன் தோன்றினான். பொதும்பர் -சிலேடைச் சொல். மரச் செறிவு. மரப் பொந்து என்னும் பொருள்களைத் தரும். 'வெயில்கண் போழாப் பயில் பூம் பொதும்பில்' என்னும் பெருங்கதையும் (1 - 28 - 27) 'பொதும்பு பொள்ளல் பொந்தாம்' எனும் பிங்கல நிகண்டும் (2853) நோக்குக. அனுமன் மரச் செறிவிலிருந்தது நோக்கினான், என்று வான்மீகமும், மரப் பொந்திலிருந்து நோக்கியதாக அபிஷேக நாடகமும் பேசும். கவிச்சக்கரவர்த்தி, இருவர் கருத்தும் பகையாதபடி பொதும்பர் என்னும் பொதுச் சொல்லாற் பேசினார். (77) |