இராவணன் வருகின்றகாட்சி 

எழுசீர் விருத்தம்

5146.

சிகர வண்குடுமி நெடு வரை எவையும்
     ஒரு வழித்திரண்டன சிவண,
மகரிகை வயிரகுண்டலம் அலம்பும்
     திண்திறல் தோள் புடை வயங்க,
சகர நீர் வேலைதழுவிய கதிரின்,
     தலைதொறும்தலைதொறும் தயங்கும்
வகைய பல் மகுடம்இள வெயில் எறிப்ப,
     கங்குலும்பகல்பட, வந்தான்.

     வண் - வளமிக்க; சிகரம் - உயர்ந்த; குடுமி - உச்சியைப் பெற்ற;
நெடுவரை எவையும் - பெரிய மலைகள் முழுவதும்; ஒருவழி - ஓரிடத்தே;
திரண்டன சிவண - சேர்ந்தன போல்; மகரிகை - மகர வடிவாய் அமைந்த
வாகுவலயங்களும்; வயிரம் - வயிரங்கள் பதிக்கப் பெற்ற; குண்டலம் -
குண்டலங்களும்; அலம்பும் - தவழ்கின்ற; திண்திறல் - மிக்கவலிமைபெற்ற;
தோள்புடை - புயங்களின் பக்கத்தில்; வயங்க - விளங்கவும்; சகர -
சகரரால் தோண்டப் பெற்ற; வேலையின்நீர் - கடல் நீரிலே; தழுவிய -
பிரதிபலிக்கின்ற; கதிரின் - சூரியனைப் போல; தலைதொறும் தலைதொறும்
-
எல்லாத் தலைகளிலும்; தயங்கும் - விளங்குகின்ற; பல்வகைய -
பலவிதமான; மகுடம் - கிரீடங்கள்; இளவெயில் எறிப்ப - இளஒளியைப்
பரப்பவும்; கங்குலும் - இரவுப் போதிலும்; பகல் பட - பகற்காலம்
தோன்றும்படி; வந்தான் - வந்தான்.

     தோள்களுக்கு வரைஉவமை. ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய
..... திரள்தோள், என்று திருமங்கையாழ்வார் பேசுவார் (திவ்ய. பெரிய திரு -5-
7-6) மகரிகை - மகரவடிவாய் அமைந்த தோள் வலயம். கிரீடங்கள், கரண்ட
மகுடம், கிரீட மகுடம் என்பன போல் பலவாயிருத்தலின் பல் மகுடம் எனப்
பேசப்பெற்றது. சிற்பச் (11) செந்நூல் 'தலைக்கோலம்' என்னும் தலைப்பில்
மகுடம் பற்றி அறிக. கறுத்த இராவணனின் தோள்களில் மேவிய தோள்
வலயமும் குண்டலமும் கடலில் பிரதிபலிக்கும் சூரியனைப் போன்றிருந்தன.
இளவெயில் என்றதனாலும், சகரவேலை என்றதனாலும் இங்கே குறிப்பிட்ட
கடல் கீழைக்கடல் என்க. இதனைக் 'குணாது ...... தொடு கடல்' என்று
புறப்பாட்டு பேசும். அங்கு, கீழ்க்கண்ணது சகரரால் தோண்டப்  பெற்ற சாகரம்.
எனப் பொருள் வரையப்பெற்றது கவிச்சக்கரவர்த்தி்யும் 'சகரவேலை' என்றார்.

    இவ்விருத்தம்விளம் - மா - விளம் - விளம் - மா என்னும் சீர்களை
முறையே பெற்றுவரும். இவ்விருத்தப் பாடல்களை 34 முறை கம்பன்
கையாண்டுள்ளான்.                                            (78)