5148.

நான நெய்விளக்கு நால் - இரு கோடி,
     நங்கையர்அங்கையில் எடுப்ப,
மேல் நிவந்துஎழுந்த மணியுடை அணியின்
     விரி கதிர் இருள் எலாம் விழுங்க,
கால்முதல்தொடர்ந்த நூபுரம் சிலம்ப,
     கிண்கிணிகலையொடும் கலிப்ப,
பால் நிறத்துஅன்னக் குழாம் படர்ந்தென்னப்
     பற்பலமங்கையர் படர;

     நால் இருகோடிநங்கையர் - எட்டுக்கோடி பெண்கள்;நான நெய்
விளக்கம் -
புனுகுத் தைல விளக்கை; அங்கையின் எடுப்ப - அகங்கையில்
ஏந்தவும்; (அப்பெண்களின்) மேல் - மேலே; நிவந்து எழுந்த - உயர்ந்து
எழுந்த; மணியுடை - மணிகளைப் பெற்ற; அணியின் - ஆபரணங்களின்;
விரிகதிர் -
விரிந்த ஒளி; இருள் எலாம் - எல்லா இருளையும்; விழுங்க -
உட்கொள்ளவும்; பற்பல - பலவிதமான;மங்கையர் - மகளிர்; கால்முதல் -
பாதத்திலே; தொடர்ந்த - அணியப்பெற்ற; நூபுரம் சிலம்ப - சிலம்பு
ஒலித்தலாலும்; கிண்கிணி - சதங்கை; கலையொடும் - மேகலையுடன்;
கலிப்ப -
ஒலித்தலாலும்; பால்நிறத்து அன்னக் குழாம் -
வெண்ணிறமுடைய அன்னக்கூட்டம்; படர்ந்த என்ன - பரவினாற் போல;
படர -
சுற்றிச் சூழவும்;

     நானநெய் -புழுகுநெய் -நூபுரம் சிலம்ப, கலையொடும் கலிப்ப என்னும்
எச்சங்கள் படர என்னும் எச்சத்தைக் கொண்டு முடிந்தன. பற்பல மங்கையர்,
நூபுரம் சிலம்ப, கலையொடும் கலிப்ப அன்னக் குழாம் படர்ந்த என்ன படர
என முடிந்தது. கலை, மேகலை என்பதன்முதற் குறை.              (80)