| 5150. | நீல்நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்தவெள் அருவியின் நிமிர்ந்த பால் நிறப்பட்டின் மாலை உத்தரியம் பண்புற,பசும்பொன் ஆரத்தின் மால் நிறமணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர்கதிர் இள வெயில் பொருவ, சூல் நிறக்கொண்மூக் கிழித்து இடை துடிக்கும் மின் என,மார்பில் நூல் துளங்க; |
நிமிர்ந்த -உயர்ந்த;பால்நிறம் - வெண்ணிறம் பெற்ற; பட்டு உத்தரியமாலை - பட்டு அங்கவத்திர வரிசை; நீல்நிறக் குன்றின் - நீலநிறமுடையமலையில்; உற நெடிது தாழ்ந்த - மிகுதியாக உயர்ந்து தாழ்ந்த; வெள் -வெண்மையான; நீத்த அருவியின் - வெள்ளத்தைப் பெற்ற அருவியின்;பண்புற - இயல்பை அடையவும்; பசும் பொன் ஆரத்தின் - பசும்பொன்னாற் செய்யப்பட்ட ஆரத்திலே உள்ள; மால் நிற மணிகள் - பெருமைமிக்க நிறத்த இரத்தினங்கள்; இடை - இடையிடையே; உற பிறழ்ந்து -நன்றாக ஒளியை வீசி; வளர் கதிர் - உதிக்கின்ற சூரியனின்; இளவெயில்பொருவ - மெல்லிய மஞ்சள் வெயிலை ஒத்திருக்கவும்; மார்பின் நூல் -மார்பில் உள்ள பூணூல்; சூல் நிறக் கொண்மூ - கருக்கொண்ட மேகத்தை;கிழித்து - பிளந்து கொண்டு; இடை துடிக்கும் - (அதன்) நடுவில் பளிச்சிடும்;மின் என - மின்னலைப் போல; துளங்க - அசையவும். பட்டின் என்பதில்உள்ள 'இன்' அசை. 'நுசிப்பினை ஒசிய வீங்கி' என்பது சிந்தாமணி (459) 'நுசுப்பு வீங்கி' என்பது பொருள். இனியர், இன்னும் ஐயும் அசைச்சொல் என்றார். உத்தரியம் - மேலாடை. அது பட்டு. 'உத்தரியப் பட்டு ஒருபால் ஒளிர' என்பர் பட்டினத்தடிகள். உத்தரியம் என்பதுமேலாடை. இஃது இடது தோளிலிருந்து இடுப்புவரை தொங்கி முதுகுப் பக்கத்தில் தொடர்ந்து வந்தடையும். இதற்கு மாற்றாக உத்தரியம் போல் முத்து வடங்களே அமைந்திருப்பதைச் சிற்பங்களில் காணலாம். இது முத்தினாலான உத்தரியம் ஆனதால் 'மௌத்தி சோத்தரீயம்' எனப்படும் (சிற்பச் செந்நூல் 96) (82) |