| 5151. | தோள்தொறும் தொடர்ந்த, மகரிகை வயிரக் கிம்புரி வலய மாச் சுடர்கள் நாள்தொறும்சுடரும் கலி கெழு விசும்பில், நாளொடுகோளினை நக்க, தாள்தொறும்தொடர்ந்த தழங்கு பொற்கழலின் தகை ஒளிநெடு நிலம் தடவ, கேள்தொறும்தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முகமலர்இரவினும் கிளர; |
தோள் தொறும் -தோள்கள்தோறும்; தொடர்ந்த - அணியப்பெற்ற; மகரிகை - சுறாமீன் வடிவமாக அமைந்த; வயிர - வயிரம் பதிக்கப் பெற்ற; கிம்புரி வலயம் - தோள் வலயத்தினுடைய; மாச்சுடர்கள் - சிறந்த ஒளிகள்;கலிகெழு விசும்பில் - ஒலிக்கு ஆதாரமாகிய ஆகாயத்தில்; நாள் தொறும் - தினந்தோறும்; சுடரும் - விளங்குகின்ற; நாளொடு கோளினை -நட்சத்திரங்களையும் கிரகங்களையும்; நக்க - அடக்கவும்; தாள் தொறும் -பாதங்கள் தோறும்; தொடர்ந்த - அணியப்பெற்ற; தயங்கு - ஒளிவீசும்; பொன்கழலின் - அழகிய வீரக் கழலின்; தகை ஒளி - சிறந்த ஒளி; நெடுநிலம் தடவ - பெரிய பூமியை அளவளாவவும்; கேள் தொறும் - எல்லாச் சுற்றத்தினரோடும்; தொடர்ந்த - இடைவிடாது செல்லும்; முறுவல் வெள்நிலவின் - புன்னகையின் வெள்ளிய நிலவால்; முகமலர் - (இராவணனின்) முகமாகிய மலர்; இரவினும் கிளர - இரவுப் போதிலும் விளங்கித் தோன்ற. கோளினை நக்கஎன்ற தொடரில் உள்ள 'நக்க' என்பது 'அடக்க' எனப்படும் பொருள் தந்தது. பால்நக்க தீஞ்சொல் - மான் நக்க நோக்கின் மடவார் (சிந்தாமணி -கனகமாலை 310) நாள் நட்சத்திரம். கோள் - கிரகங்கள். வயிரக்கிம்புரி - தோள்வலயம் (வாகுவலயம்) (83) |