| 5152. | தன்நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம்தழைபட உடுத்த பொன் நிறத்தூசு, கரு வரை மருங்கில் தழுவிய புதுவெயில் பொருவ; மின் நிறக்கதிரின் சுற்றிய பசும் பொன் விரல்தலைஅவிர் ஒளிக் காசின் கல் நிறக்கற்றை, நெடு நிழல் பூத்த கற்பக முழுவனம் கவின; |
தன் நிறத் தோடு- தன்னுடைய கரியநிறத்துடன்; மாறு தந்து - வேறுபாட்டை வழங்கி; இமைக்கும் - விளங்குகின்ற; நீவி - கொய்சகம்; அம் -அழகு; தழைபட - செழிப்புற்றுத் தோன்ற; உடுத்த - உடுக்கப் பெற்ற; பொன்நிறத்தூசு - பொன்னிறம் பெற்ற பட்டாடை; கருவரை மருங்கில் - கருத்த மலையின் சூழலில்; தழுவிய - சார்ந்துள்ள; புது வெயில் பொருவ - இளைய (மஞ்சள்) வெயிலை ஒப்பவும்; விரல்தலை - கையின்கண் அணியப் பெற்ற; மின் நிறம் - மின்னல் போன்ற நிறமுடைய; கதிரின் - ஒளி;சுற்றிய - சுற்றப்பெற்ற; பசும்பொன் - பசுமையான கடகத்தில் பதித்த; அவிர் ஒளி - மிக்க ஒளியையுடைய; காசின்கல் - இரத்தினக் கற்களின்; நிறக் கற்றை - நிறங்களின் தொகுதி; நெடுநிழல் - மிக்க ஒளியை; பூத்த - வெளிப்படுத்திய; முழு - பெரிய; கற்பகவனம் - கற்பகவனத்தைப் போல; கவின - அழகு பெறவும். இராவணனின்மோதிரங்களில் பதித்த மணியின் ஒளியானது கற்பகவனத்தைப் போல அழகு பெறவும். பொன் - மோதிரம். நிழல் பூத்த - ஒளியை வெளிப்படுத்தும். புதுவெயில் என்றதனால்காலை மஞ்சள் வெயில் எனக் கொள்க. கற்பக முழுவனம் கடுப்ப என்று பாடம் கொண்டு இந்தக் குணங்களினாலே கற்பகச்சோலை ஒத்தான் இராவணன் என்று பழைய வுரை கூறும். (அடை - பதி)இப்பாடலின் பின் இரண்டு அடிகளில் மோதிரம் பேசப்பட்டது என்று பலர்கருதுகின்றனர். இராம பிரானின் கோலம் பேசும் பகுதியில் (கடிம. 57)கடகமும் கற்பகமும் நினைக்கப் பெறுகின்றன. கற்பகம் ஈன்ற தாம் என்னகைக் கடகம் மின்ன என்ற பகுதி நோக்கத் தக்கது. ஆதலின் இங்குபசும்பொன் என்பது கடகமே. இங்கு விரல் என்றது கையையே. 'படை கொள் நோன் விரல்' என்னும் முல்லைப்பாடல் (முல்லை 77) நோக்குக. அங்குஇனியர் 'வலிய கை' என்று உரை வகுத்தார். தமிழ்த் தெய்வம். உ.வே.சா அடிப்பகுதியில் கணவனை நோக்கி இணைவிரல் கூப்பி என்னும்பெருங்கதையை மேற்கோள் காட்டினார் (பெருங் -4-7-36) விரல்தலை -கையின்கண். கதிரின் என்பதில் உள்ள 'இன்' அசை. கற்பினின் - (சிந்தா - 604) கதிர் சுற்றிய பசும்பொன்' என்க. (84) |