5153. | சன்னவீரத்த கோவை வெண் தரளம், ஊழியின்இறுதியில் தனித்த பொன் நெடுவரையில் தொத்திய கோளும், நாளும்ஒத்து, இடை இடை பொலிய; மின் ஒளிர்மௌலி உதய மால்வரையின் மீப்படர்வெங் கதிர்ச் செல்வர் பன்னிருவரினும்,இருவரைத் தவிர்வுற்று, உதித்ததுஓர் படி, ஒளி பரப்ப; |
சன்ன வீரத்த -'சன்னவீரம்' என்னும் உறுப்பைப் பெற்ற; வெண்தரளக் கோவை - வெண்மையான முத்தால் அமைந்த வீர சங்கி்லி; ஊழியின் இறுதியில் - யுகத்தின் முடிவிலே; தனித்த - தனியாக உள்ள; நெடு பொன் வரையில் - பெரிய மேரு மலையில்; தொத்திய - பற்றியுள்ள; கோளும் நாளும் ஒத்து - கிரகங்களையும் நட்சத்திரங்களையும் ஒத்து; இடையிடை - மற்ற ஆபரணங்களின் நடுவிலே; பொலிய - விளங்கவும்; மின் - மின்னலைப் போல; ஒளிர் மௌலி - விளங்கும் பத்துக் கிரீடங்கள்; உதய மால் வரையின் - உதயகிரியின்; மீப்படர் - மேலே பரவிய; வெங்கதிர்ச் செல்வர் - கதிரையே செல்வமாகப் பெற்ற சூரியர்கள்; பன்னிருவரின் - பன்னிருவர்களுக்குள்ளே; இருவரைத் தவிர்வுற்று - இருவர் நீங்க (மற்றை பதின்மர்); உதித்தது ஓர்படி - உதித்த ஒப்பற்ற இயல்புடன்; ஒளி பரப்ப - ஒளியைப் பரவச் செய்யும். சன்னவீரம் -வீரசங்கிலியில் அமையும் ஓர் உறுப்பு. கழுத்தினைச் சுற்றியும், மார்பணிகளைச் சுற்றியும் உடலின் ஒரு மூலையிலிருந்து எதிர் மூலைக்குக் குறுக்கே சென்று முதுகிலும் அங்ஙனமே அமைந்த இரு சங்கிலிகளின் பெயர் வீரசங்கிலி, இச்சங்கிலி ஸ்தனத்திலிருந்து கீழ்விரல் அளவு கீழே தொங்கிச் செல்லும். இதற்குச் 'சன்னவீரம்' என்றும் பெயர் உண்டு. (சிற்பச் செந்நூல் 94) (85) |