| 5156. | தொளை உறுபுழை வேய்த் தூங்கு இசைக் கானம் துயலுறாது ஒரு நிலை தொடர, இளையவர் மிடறும்இந் நிலை இசைப்ப, கின்னரர்முறை நிறுத்து எடுத்த கிளை உறு பாடல்,சில்லரிப் பாண்டில் தழுவியமுழவொடு கெழுமி, அளை உறும் அரவும்அமுது வாய் உகுப்ப, அண்டமும்வையமும், அளப்ப; |
தொளையுறு -தொளைகளைப் பெற்ற; புழைவேய் - உள்ளீடற்ற புல்லாங்குழலின் கண்ணே; தூங்கு இசைக் கானம் - மந்த கதியில் அமைந்த இசை; துயல் உறாது - தொய்வு அடையாதபடி; ஒரு நிலை தொடர - ஒப்பற்ற பண்புடன் தொடரவும்; இந்நிலை - இதே நிலையில்; இளையவர் மிடறும் - மகளிரின் கண்டமும்; இசைப்ப - பாடவும்; கின்னரர் - கின்னரர் எனும் தேவசாதியினர்; முறை நிறுத்த எடுத்த - ஒழுங்கு அமைய எடுத்த; கிளை உறு பாடல் - இளிக்கிரமத்தில் அமைந்த பாட்டு; சில்லரி - சில்லரி என்னும் சிறு தோற்கருவியுடனும்; பாண்டில் தழுவிய - கைத் தாளத்துடனும் கூடிய; முழவுடன் - மத்தளத்துடனும்; கெழுமி - ஒன்றுபட (அதனால்); அளை உறை அரவும் - புற்றின்கண் உள்ள பாம்பும்; வாய் - வாயின்கண்ணே; அமுது உகுப்ப - அமுதத்தைக் கொட்டவும்; (அவரிசை) அண்டமும் - அண்டங்களையும்;வையமும் - நிலவுலகத்தையும்; அளப்ப - தனக்குள் கட்டுப்படுத்தவும். இசை, சுத்தம்,சாளவம், தமிழ் என்று மூவகை பேசப்படுகிறது. அவற்றுள் சுத்தம் தூங்கிசை. சுத்தமாவது ஓசையை உச்சரித்து நாசியிலே ஓட்டிச் சிரத்தையும் நாபியையும் சம்பித்துத் தூங்கிசையாகப்பாடுவது (பஞ்சமரபு) சில்லரி - வட்ட வடிவமான தோற்கருவி - சில்லரி கறங்கும் (அகம் 301) தமிழ்இசை (145 பக்) பாண்டில் - கைத்தாளம். நுண் உருக்குற்ற விளங்கு அடர்ப்பாண்டில் (மலைபடுகடாம் 4) பாண்டில், தாளம் என்றே அழகர் வரைந்தார் (பரிபாடல் 15 - 42) கிளை உறு பாடல் இளிக்கிரமத்திற் பாடப் பெற்ற பாடல். கிளை என்னும் சொல்லுக்கு பரிபாடலி்ல் (11 - 127) கிளையாகிய இளி என விளக்கினார். யாழ் நூல் - குரற்கிரமம். இளிக்கிரமம் விளரிக்கிரமம் - என்று மூன்று கிரமம் பற்றிப் பேசும் (பக் 82). இளிக்கிரமம் 97 ஆம் பக்கத்தில் விவரிக்கிறார். இளி ஒன்றி நின்ற இசை (யாழ் நூல் - தெய்வ -2) (88) |