5157.

அன்ன பூஞ்சதுக்கம், சாமரை, உக்கம்
     ஆதியாம்வரிசையின் அமைந்த,
உன்னரும்பொன்னி்ன், மணியினின் புனைந்த
     இழைக்குலம், மழைக் கருங் கடைக் கண்,
மின் இடை, செவ்வாய், குவி முலை, பணைத் தோள்
     வீங்குதேர் அல்குலார் தாங்கி,
நல் நிறக்காரின் வரவு கண்டு உவக்கும்
     நாடகமயில் என நடப்ப;

     உன்னரும் -கற்பனை செய்ய முடியாத; பொன்னின் - பொன்னாலும்;
மணியினின் - மணியினாலும்; புனைந்த - செய்யப்பெற்ற;இழைக்குலம் -
ஆபரணங்களையும்; மழைக் கருங்கடைக்கண் - குளிர்ந்த கருத்த
கடைக்கண்களையும்; மின்இடை - மின்னல் போன்ற இடையையும்;
செவ்வாய் -
சிவந்த வாயையும்; குவிமுலை - குவிந்த தனங்களையும்;
பணைத்தோள் -
மூங்கில் போன்ற தோள்களையும்; வீங்கு தேர்
அல்குலார் -
பெரிய தேர் போன்ற அல்குலையும் உடையமகளிர்; அன்ன -
அப்படிப்பட்ட; பூஞ்சதுக்கம் - அழகிய மணை; சாமரை - சாமரை; உக்கம்
-
ஆலவட்டம்; ஆதி ஆம் - முதலான; வரிசையின் அமைந்த -
முறைப்படி அமைந்த பொருள்களை; தாங்கி - சுமந்து கொண்டு;
நல்நிறக்காரின் -
கரிய நிறமுடைய மேகத்தின்; வரவுகண்டு -
வருகையைப்
பார்த்து;உவக்கும் - மகிழ்ச்சியடையும்; நாடக மயில் என -
ஆடும் மயில்களைப் போல; நடப்ப - நடந்து வரவும்.

     உக்கம் - ஆலவட்டம். உக்கமும் தட்டொளியும் தந்து (திருப்பாவை)
கவிஞன் தன் உள்ளம் கருதியதைச் சுட்டிக் கூறுவான். அதை உளமறி சுட்டு
என்பர். இங்கே அன்ன என்பதுவும் அது. மழை - குளிர்ச்சி. சவுக்கம் என்று
பாடம் கொண்டு நாற்கோணமான விதானம் என்று பொருள் கூறப்பெற்றது
(அடை - பதி) பூஞ்சவுக்கம் - பூவினாற் செய்த இளைப்பாறும் இடம் என்பது
பழைய உரை - (அடை -பதி)                                 (89)