5158.

தந்திரிநெறியில் தாக்குறு கருவி
     தூக்கினர்எழுவிய சதியின்,
முந்துறு குணிலோடுஇயைவுறு குறட்டில்,
     சில்லரிப்பாண்டிலில், முறையின்,
மந்தர கீதத்துஇசைப் பதம் தொடர,
     வகை உறுகட்டளை வழாமல்,
அந்தர வானத்துஅரம்பையர், கரும்பின்
     பாடலார்,அருகு வந்து ஆட;

     தந்திரிநெறியில் - யாழ்நூல் முறைப்படி;தாக்குறு கருவி -
தாக்கப்படு்ம் தாளத்தை; தூக்கினர் - தாங்கியவர்கள்; எழுவிய - எழுப்பிய
(அமைத்த); சதியின் - தாளசதியின் படியும்; முந்துறு குணிலோடு இயைவுறு
-
முற்படும் குறுந்தடியுடன் தொடர்புடைய; குறட்டில் - குறடு என்னும்
பறையின்படியும்; சில்லரி (இன்) - சில்லரியின்படியும்; பாண்டிலின் -
பாண்டிலின்படியும்; முறையின் - மரபுப்படி; மந்தரம் - மந்த ஓசை; இசை-
பொருந்திய; கீதத்துப்பதம் - கீதத்தில் ஒருவகையான பதம்; தொடர -
தொடரவும் (அதற்கேற்ப); அந்தரவானத்து அரம்பையர் - மேல் உள்ள
விண்ணுலகத் தேவ மகளிர்; வகையுறு - பல்வகையான; கட்டளை வழாமல்
-
விதி பிறழாதபடி; கரும்பின் பாடலார் - கரும்பு போலப் பாடுபவர்; அருகு
உவந்து -
பக்கத்தில் மகிழ்ந்து; ஆட - ஆடவும்.

     சதியில்,குறட்டில், பாண்டிலில் பதம் தொடர, கட்டளை வழாமல் ஆட,
என அமைக்க. குறடு - ஒருவகைப் பறை. 'தழங்கு பேரியும் குறட்டொடு
பாண்டிலும்' (கம்ப. மிசை. 107) குறடுமாப் பேரி கொட்டி (பிரமாத்திர 3) சில்லரி
பாண்டில் (கம்ப. 5156. குறிப்புரை) பதம் - இசைப்பாட்டுவகை.பதங்களில்
தண்ணுமை பாணி பண்ணுற.... சதி மிதிப்பவர் (கம்ப. 144)           (90)