5163.

கேடகத்தோடு, மழு, எழு, சூலம்,
     அங்குசம்,கப்பணம், கிடுகோடு,
ஆடகச் சுடர்வாள், அயில், சிலை, குலிசம்
     முதலியஆயுதம் அனைத்தும்,
தாடகைக்கு இரட்டிஎறுழ் வலி தழைத்த
     தகைமையர்,தட வரை பொறுக்கும்
சூடகத் தடக் கை,சுடு சினத்து, அடு போர்,
     அரக்கியர்தலைதொறும், சுமப்ப;

     தாடகைக்கு இரட்டி- தாடகையை விட இரண்டு பங்கு; எறுழ்வலி -
மிக்க வலியை; தழைத்த - பெருகியுள்ள; தகைமையர் - தன்மை உடைய;
தடவரை பொறுக்கும் -
பெரிய மலையைச் சுமக்கும்; சூடகத் தடக்கை -
வளையல் அணிந்த கைகளால்; சுடுசினத்து அடுபோர் - பகைவரை
அழிக்கும் போரில் வல்ல;அரக்கியர் - அரக்கிகள்; கேடகத்தோடு -
கேடகத்தையும்;மழு - மழுவையும்; எழு - இருப்புலக்கையையும்; சூலம் -
சூலத்தையும்;அங்குசம் - அங்குசத்தையும்; கப்பணம் - இரும்பால் செய்த
ஆனைநெருஞ்சி முள்ளையும்; கிடுகு - கிடுகையும்; ஆடகச் சுடர்வாள் -
பொன்வாளையும்; அயில் - வேலையும்; சிலை - வில்லையும்; குலிசம் -
வச்சிராயுதத்தையும்; முதலிய - முதலான; ஆயுதம் அனைத்தும் - எல்லா
ஆயுதங்களையும்; தலை தொறும் சுமப்ப - தலைகள் தோறும் தாங்கவும்.

     கப்பணம் -நெருஞ்சி முள் போன்ற ஆயுதம். காய்ந்தனன் கருக,
உந்திக் கப்பணம் சிந்தினாளோ (சிந்தாமணி 285) கிடுகு, கேடக வகைகளில்
ஒன்று. கேடக வகைகளைச் சிந்தாமணி 2218 ஆம் பாடல் பேசும். கிடுகு -
மயிர்க்கிடுகு என்று இனியர் விளக்கினார். சூடகம் - வளையல். உம்மைப்
பொருள் தந்த 'ஒடு'வை எல்லாவற்றுடன் கூட்டுக. மழுவொடு, எழுவொடு
எனச் சேர்க்கவும்.                                         (95)