மூவர் மன நிலை

கலி விருத்தம்

5167.

கூசி ஆவிகுலைவுறுவாளையும்,
ஆசையால் உயிர்ஆசு அழிவானையும்,
காசு இல் கண்இணை சான்று எனக் கண்டனன்-
ஊசல் ஆடி உளையும்உளத்தினான்.

(அனுமன்)

     கூசி - அருவருப்புற்று; ஆவி குலைவுறுவாளையும் - உயிர்
குலைகின்ற பிராட்டியையும்; ஆசையால் - காமத்தால்; உயிர் ஆக -
உயிர்க்கு ஆதாரமாகிய ஒழுக்கம்; அழிவானையும் - சிதைகின்ற
இராவணனையும்; காசு இல் - குற்றம் இல்லாத; இணைகண் - இரண்டு
கண்களும்; சான்று என - சாட்சி என்று (அமைத்து); கண்டனன் - பார்த்து;
ஊசல் ஆடி -
தடுமாற்றம் அடைந்து (அதனால்); உளையும் - உளைச்சல்
அடையும்; உளத்தினான் - மனம் உடையவன் ஆனான்.

     அனுமன் குலைகின்றபிராட்டியையும், காமத்தால் சிதைகின்ற
இராவணனையும் கண்டு, ஊசல் ஆடி, மனம் உளைச்சல் உற்றான். ஊசல்
ஆடுவது பிராட்டிக்கு என்ன நேருமோ என்னும் அச்சத்தால். பிராட்டி
கூசுவதால் அவள் கற்பு காக்கப்படும். ஆனால், வேறு தீங்கு நேருமோ என்று
அஞ்சினான். ஆசு - ஆதாரம். உயிர்க்கு ஆதாரம் ஒழுக்கம். உயிர்க்கு
ஆதாரம் அழிந்தமையின் இராவணன் இறந்தவனே. "விளிந்தாரின் வேறல்லர்,,,,
தெளிந்தாரில் தீமை புரிந்து ஒழுகுவார்" என்பது தமிழ் மறை (குறள் 143)
இவ்விருத்தம் மா - விளம் - விளம் - விளம் என்னும் சீர்களைப் பெற்று
வரும். இப் பாடலை. அமரர் கம்பன் அடிப்பொடி அவர்கள் அளவடி
நான்குடைக் கட்டளைக்கலிப்பா என்பர். (மணிமலர் 76)             (99)