5170.

ஈசற்குஆயினும் ஈடு அழிவுற்று, இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்,
ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திட,
கூசிக் கூசி,இனையன கூறினான்;

     ஈசற்கு ஆயினும் -(எதிர்வருபவன்) சிவபிரான் ஆனாலும்
(அவனுக்கும்); ஈடு அழிவுற்று - வலிமை அழிந்து; இறை - சிறிதும்;
வாசிப்பாடு அழியாத -
பெருமிதம் குன்றாத; மனத்தினான் -  உள்ளத்தை
உடைய இராவணன்; ஆசைப்பாடும் - ஆசையும்; அந்நாணும் - அந்த
நாணமும்; அடர்த்திட - வருத்திட (அதனால்); கூசிக் கூசி - கூசிக் குறுகி;
இனையன -
இப்படிப்பட்ட மொழிகளை; கூறினான் - சொன்னான்.

    ஈடு - வலிமை.வாசிப்பாடு - பெருமிதம். கூசுதல் - வெட்கம் சுருக்கம்
என்னும் பொருளில் வந்தன. கண் சுருங்குதலை, சுடர்கண்டு கண் கூசிற்று
என்பதால் அறிக. அந்நாண் - உளம் அறிசுட்டு                    (102)