5173. | 'பூந் தண்வார் குழல் பொன் கொழுந்தே ! புகழ் ஏந்து செல்வம்இகழ்ந்தனை;இன் உயிர்க் காந்தன்மாண்டிலன், காடு கடந்து போய், வாய்ந்து வாழ்வதுமானிட வாழ்வு அன்றோ ? |
பூந்தண்வார்குழல் - பூவணிந்த குளிர்ந்த நீண்ட கூந்தலையுடைய; பொன் கொழுந்தே ! - பொன்னின் கொழுந்து போன்றவளே ! நீ; புகழ் ஏந்து - புகழைத் தாங்கிய; செல்வம் - என்னுடைய செல்வத்தை; இகழ்ந்தனை - அவமதித்தாய்; இன்உயிர்க் காந்தன் - (உன்னுடைய) உயிர் போன்ற கணவன்; மாண்டிலன் - (என்னால்) இறவாமல் (தப்பி); காடு கடந்து - காடுகளைத் தாண்டி; போய் - அயோத்திக்குச் சென்று; வாய்ந்து - அரசு கிடைக்கப் பெற்று; வாழ்வது - வாழும் வாழ்வு; மானிட வாழ்வன்றோ - மனித வாழ்க்கை அல்லவா. இராவணன்"அரம்பை மாதர் ..... ஏவல் செய்ய உலகம் ஈரேழும் ஆளும் செல்வத்துள் உறைதி' என்று முன்பு பேசுகிறான் (கம்ப. 3384) (105) |