5178. | 'பெண்மையும், அழகும், பிறழா மனத் திண்மையும்,முதல் யாவையும், செய்ய ஆய், கண்மையும்பொருந்தி, கருணைப் படா வண்மை என்கொல்? - சனகரின் மடந்தையே ! |
சனகர் இல்மடந்தையே - சனகரின் குடியிலேபிறந்த பெண்ணே ! பெண்மையும் - பெண்மை இயல்பும்; அழகும் - அழகும்; பிறழா - தவறுபடாத; மனத்திண்மையும் - உள்ள ஆற்றலும்; முதல் - (இவை) முதலாகப் பேசப்படும்; யாவையும் - எல்லாப் பண்புகளும்; செய்யவாய் - செம்மையுடையதாய்; கண்மை பொருந்தி - கண்ணோட்டத்துடன் ஒன்று பட்டுபொருந்தி; கருணைப் படா - இரக்கத்துடன் படாது; வண்மை - ஈஈஈகைப்பண்பு மாத்திரம் (அழிந்து போன காரணம்); என்கொல் - யாதோ. இல் என்பதற்குமருத நிலப் பெண் என்றும் பொருள் உள்ளது. மனைவி கிழத்தி இல்லாள் இல் என்று அனையவை மருதத் தலைவிக்காகும் என்று திவாகரம் பேசும் (மக்கள் .... தொகுதி) அது கொண்டு, சனகர் குலத்திலே தோன்றிய பெண்ணுக்கு என்றும் பொருள் கூறலாம். உணர்வால் பெறவேண்டிய காதலை இரக்கத்தால் பெற நினைக்கும் இராவணன் செயல் காமச் செவ்வி அறியாமையைப் புலப்படுத்தும். கண்மையும் பொருந்தி, காணக் கண்ணும் பொருந்தி என்பது பழையவுரை (அடை - பதி) 'சனகர்இல் மாண்டவா' என்னும் பாடல் சிறப்புடையது. சனகர் குடியில் வண்மை மட்டும் இல்லாது போனபடி எவ்வாறு என்பதாம். (110) |