| 5180. | 'தக்கது என் உயிர் வீடு எனின், தாழ்கிலாத் தொக்க செல்வம்தொலையும்; "ஒருத்தி நீ புக்கு உயர்ந்தது"எனும் புகழ் போக்கி. வேறு உக்கது என்னும்உறு பழி கோடியோ ? |
தக்கது என்உயிர் - சிறப்பு மிக்க என் உயிரானது; வீடு எனின் - (உன்னால்) அழிய; தாழ்கிலா - இழிவற்ற (என்னுடைய); தொக்க செல்வம் தொலையும் - திரண்ட செல்வம் அழிவடையும்; ஒருத்தி நீ - ஒப்பற்ற நீ; புக்கு உயர்ந்தது - வந்து சேர (இலங்கை) உயர்வடைந்தது; எனும் புகழ் - என்கின்ற புகழ் மொழியை; போக்கி - ஒதுக்கிவிட்டு;(சீதையால்) (இலங்கை) வேறு உக்கது - வேறுபட்டுஅழிந்தது; என்னும் - என்று உலகம் பேசும்; உறு பழி - பெரும் பழிச்சொல்லை; கோடியே - ஏற்றுக் கொள்வாயா. சீதை பிறக்கஇலங்கை அழிந்தது என்பது நாட்டு வழக்கு. கொள் + தி =கோடி. முதனிலை திரிந்த தொழிற்பெயர். உறு - மிகுதியை உணர்த்தும் உரிச்சொல். வள்ளுவர் 'உறுபசி' என்பர். (குறள் 734) உக்கது - அழிந்தது. காதல் கைகூடாமற் போனால் அழிவேன் என்கிறான். இவ்வளவு அன்புடைய என்னை நீ ஒதுக்கலாமா என்பது தொனி. (112) |