| 5181. | 'தேவர் தேவியர் சேவடி கைதொழும் தா இல் மூஉலகின்தனி நாயகம் மேவுகின்றது,நுன்கண்; விலக்கினை; ஏவர் ஏழையர்நின்னின், இலங்கிழாய் ? |
இலங்கிழாய் ! -விளக்கமான ஆபரணம் அணிந்த பெண்ணே; தேவர் - தேவர்களும்; தேவியர் - தெய்வப் பெண்களும்; சேவடி கை தொழும் - உன் சிவந்த அடிகளைக் கை கூப்பி வணங்கும்படியான; தாவு இல் - அழிவு இல்லாத; மூ உலகின் - மூன்று உலகங்களின்; தனி நாயகம் - ஒப்பற்ற தலைமைப் பதவி; நுன்கண் மேவுகின்றது - உன்பால் வந்து சேர்கின்றது; விலக்கினை - அதனை ஒதுக்கி விட்டாய்; நின்னின் - உன்னைப் போல; ஏழையர் - அறிவற்றவர்கள்; ஏவர் - யாவர். நாயகம் -தலைமைப் பதவி. மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகமே (திருவாய்மொழி - 3.10.11) தாவு - அழிவு தாவா நல்லறம் (சிலம்பு 30;125) ஏழை - அறிவற்றவர். "ஏமுற்றவரினும் ஏழை ..... பகை கொள்பவன்" (குறள் 873) (113) |