5182. | 'குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என் அடிமை கோடி;அருளுதியால்' எனா, முடியின் மீதுமுகிழ்ந்து உயர் கையினன், படியின்மேல்விழுந்தான், பழி பார்க்கலான். |
பழிபார்க்கலான் - தன்பால் வரும்பழியைப்பாராத இராவணன்; மூன்று உலகும் - மூன்று உலகத்தவர்களையும்; குடிமை செயும் - குடிமக்களாக வைத்து ஆளும்; கொற்றத்து - வெற்றியைப் பெற்ற; என் - என்னுடைய; அடிமை - அடியனாம் தன்மையை; கோடி - கொள்க; அருளுதியால் எனா - அருள்வாயாக என்று கூறி; முடியின்மீது - தலைகளின் மேல்; முகிழ்த்து - குவித்து; உயர் கையினன் - உயர்ந்த கைகளை உடையவனாய்; படியின்மேல் - பூமியி்ன் மேல்; விழுந்தான் - விழுந்து வணங்கினான். குடிமை -குடிமக்கள். அடிமை என்றும் கொள்ளலாம். குடிமை செயும் கொடும் புலையன் (அரிச்சந்திரபுராணம் சூழ்வினை - 70) அடிமை - தொண்டு. என்றார்க்கு 'அடிமை புகுத்திவிடும்' என்னும் குறட் பகுதிக்குக் (608) காலிங்கர் 'பகை வேந்தர்க்குத் தான் ஏவல் கேட்டுப் பணிந்து ஒழுகும் அடிமை புகுத்திவிடும் என்று விளக்கம் செய்தார். அழகர் அடிமை - அடியனாம் தன்மை என்பர். அருளுதியால் - இதில் உள்ள ஆல் அசை. (114) |