இராவணனுக்குச் சீதைவழங்கிய அறிவுரை அறுசீர் விருத்தம் 5183. | காய்ந்தனசலாகை அன்ன உரை வந்து கதுவாமுன்னம், தீய்ந்தனசெவிகள்; உள்ளம் திரிந்தது; சிவந்த சோரி பாய்ந்தன,கண்கள்; ஒன்றும் பரிந்திலள், உயிர்க்கும்; பெண்மைக்கு ஏய்ந்தன அல்ல,வெய்ய, மாற்றங்கள் இனைய சொன்னாள்; |
காய்ந்தன -நெருப்பிலே காயப் பெற்றவையான; சலாகை அன்ன - இரும்புக் கம்பிகள் போன்ற; உரை - சொற்கள்; வந்து - (இராவணன் வாயிலே) புறப்பட்டு; கதுவா முன்னம் - (பிராட்டி பக்கம்) சேர்வதற்கு முன் (அவளுடைய); செவிகள் தீய்ந்தன - காதுகள் வெப்பம் உற்றன; உள்ளம் திரிந்தது - மனம் (கருணையிலிருந்து) மாறுபட்டது; கண்கள் - கண்களில்; சிவந்த சோரி - சிவந்த இரத்தம்; பாய்ந்தன - பாயப் பெற்றன. ஒன்றும்- தன்னுடைய உயிர் பொருட்டாக; பரிந்திலள் - பரிவு கொண்டிலள்; பெண்மைக்கு ஏய்ந்தன - பெண்தன்மைக்கு ஏற்றவையும்; வல்ல - வன்மையுடையனவும்; வெய்ய - வெப்பம் பெற்றதும் (ஆன); இனைய மாற்றங்கள் - இத்தகைய பதிலுரைகளை; சொன்னாள் - கூறினாள். சலாகை -இரும்புக் கம்பி. சலாகை நுழைந்த மணித்துளை (மணிமேகலை 12 -66) காய்ந்தன -வினைமுற்று. இஃது பெயரெச்சம் போல் சலாகை என்னும் பெயர் கொண்டு முடிந்தது. இருவகை முற்றும் ஈரெச்சம் ஆதலும் (இலக்கணக் கொத்து 82) பெண்மைக்கு ஏய்ந்தன அல்ல - என்று பிரித்துப் பெண்மைக்கு ஏலாத என்று உரை கூறுவர், அவர்கள் பெண் தன்மைக்கு அருள் ஒன்றே உண்டு என்று கருதினர், போலும். எதையும் மென்மையாகக் கூறல் பெண் இயல்பு. கடுமையாகப் பேசுதலின் பெண்மைக்கு ஏய்ந்தன வல்ல எனினும் ஆம். "இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்ந்தன அல்ல" என்ற அடுத்த பாடலில் யான் இவ்வாறே பொருள் உரைத்திருப்பதும் காண்க. மாற்றம் - விடை. தொல்காப்பியம், கடாஅ மாற்றம் என்பர் (மரபியல் 104) பேராசிரியர் மறுதலை மாற்றத்தினை இடையில் செரித்து - என்று விளக்கினார். இராவணன் இராமபிரானைஇழித்தும், பழித்தும் பேசினான். பிராட்டி அவன் மொழியின் நொய்மையை விளக்குகிறாள். இவ்விருத்தம் விளம் - மா - மா - விளம் - மா - மா என்னும் சீர்களைப் பெற்று வரும். இவ் விருத்தம் இந்நூலில் 2536 இடங்களில் காட்சி தருகின்றது. (மணிமலர் 76) (115) |