5184. | 'மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம், கல்லொடும்தொடர்ந்த நெஞ்சம், கற்பின்மேல் கண்டது உண்டோ ? இல்லொடும்தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல, வெய்ய சொல்; இதுதெரியக் கேட்டி, துரும்பு !' எனக் கனன்று, சொன்னாள்.+ |
துரும்பு ! -துரும்புபோன்றவனே; கல்லொடும் - கல்லுடனே; தொடர்ந்த - நட்புக் கொண்ட (உறுதியால்); நெஞ்சம் - (மகளிரின்) மனமானது; கற்பின்மேல் - கற்பைவிடச் சிறந்ததாக (வேறு ஒன்றை); கண்டது உண்டோ ? - மதித்தது உண்டா; (உன் மொழிகள்) இல்லொடும் - நற்குடிப்பிறப்புடன்; தொடர்ந்த மாதர்க்கு - தொடர்புடைய மகளிர்க்கு; ஏய்ந்தன அல்ல - (நினைத்தற்கும்) ஏற்றவை அல்ல; வெய்ய சொல் - கொடுஞ்சொல் ஆகும்; தெரிய இது கேட்டி - (என் மொழியை) உள்ளம் உணர இம்மொழியை கேள்; என - என்று; மல் அடு - மல்லர்களை அழிக்கும்; திரள்தோள் வஞ்சன் - திரண்ட தோள்களையுடைய இராவணன்; மனம் - உள்ளமானது; பிறிது ஆகும் வண்ணம் - வேறுபாடு அடையும்படி; கனன்று சொன்னாள் - சினந்து பேசினாள். கண்டது -மதித்தது (லெக்ஸிகன் காண்க) இராவணன் மனம் மாறும்படி பேசினாள். இல் - குடி. 'இற்பிறந்தார்' (குறள், 951. 1044) 'கனன்று, வஞ்சன் மனம் பிறிதாகும் வண்ணம் சொன்னாள்' என்று முடிக்க பிராட்டி, இராவணனுக்கும் தனக்கும் நடுவில் துரும்பையிட்டுப் பேசியதாக வான்மீகம் பேசும். அதற்கேற்ப துரும்பினை நோக்கிச் சொல்வாள், என்று ஒரு பாடம் காணப்படுகிறது. ஒரு பெண்ணை விரும்பி வந்தவன் மனத்தை முறிக்கிறதற்கு, நெஞ்சம் திடமாயிருக்கிறதற்கு கற்பல்லாமல் வேறு ஒன்று இல்லை என்பது பழையவுரை (அடை - பதி) (116) |