5187.

'பத்து உளதலையும், தோளும், பல பல பகழி தூவி,
வித்தகவில்லினாற்கு, திருவிளையாடற்கு ஏற்ற
சித்தர இலக்கம்ஆகும்; அல்லது, செருவில் ஏற்கும்
சத்தியை போலும்?'-மேல் நாள், சடாயுவால்
தரையில் வீழ்ந்தாய் !

     மேல் நாள் -அக்காலத்தில்; சடாயுவால் தரையில் வீழ்ந்தாய் ! -
சடாயுவாலே பூமியிலே விழுந்தாய் அல்லவா; பத்துள தலையும் - பத்தாக
இருக்கும் உன் தலைகளும்; தோளும் - இருபது தோள்களும்; பலபல பகழி
தூவி -
பலவிதமான அம்புகளை ஏவி; வித்தக வில்லினாற்கு - அதிசய வில்
வீரனாகிய இராமபிரானுக்கு; ஏற்ற
 திருவிளையாடற்கு -விளையாட்டு
நிகழ்த்துதற்குப் பொருத்தமான; சித்திர இலக்கம் ஆகும் அல்லது - ஓவிய
வடிவமாக அமைக்கப் பெற்ற இலக்குப் பொருளாகுமே அல்லாமல் (வேறு
யாதாம்);  செருவில் ஏற்கும் - போரிலே இராமனை எதிர்த்து நிற்கும்;
சத்தியை போலும் - வலிமை உடையாயே.

     உன் தலைகளும்தோளும் சித்திர இலக்கமாகும். எதிர்த்துப் போர் புரிய
போர்ப் பயிற்சி செய்பவர்கள் எதிரே ஒரு தூணையோ சித்திரத்தையோ
நிறுத்தி அதன் மேல் அம்பு எய்வர். சங்க காலத்தில் இஃது முருக்க மரத்தால்
செய்த தூணாய் இருந்தது. "இளம்பல்கோசர் விளங்குபடை கன் மார்....
இகலினர் எறிந்த அகலிலை முருக்கின் பெரு மரக்கம்பம்" என்று புறம் (169)
கூறும். சிந்தாமணி 995 ஆம் பாடல் இது பற்றிக் கூறுகிறது. ஓவியம் போல்
ஓர் இலக்காகி நிற்பை என்பது பழைய உரை (அடை -பதி)           (119)