5188.

'தோற்றனைபறவைக்கு அன்று; துள்ளு நீர் வெள்ளம்
                                    சென்னி
ஏற்றவன் வாளால்வென்றாய்; அன்றுஎனின், இறத்தி
                                   அன்றே ?
நோற்ற நோன்பு,உடைய வாழ் நாள், வரம், இவை
                              நுனித்தஎல்லாம், 
கூற்றினுக்கு அன்றே ? வீரன் சரத்திற்கும் குறித்தது
                                 உண்ே்டா ?

     அன்று - அக்காலத்தில்;பறவைக்கு - சடாயுவுக்கு; தோற்றனை -
தோற்றுப் போனாய்; துள்ளு நீர் - செருக்குப் பண்பைப் பெற்ற; வெள்ளம் -
(கங்கையின்) வெள்ளத்தை; சென்னி ஏற்றவன் - சடையில் தாங்கிய
சிவபெருமானின்; வாளால் - வாள் கொண்டு; வென்றாய் - வெற்றி பெற்றாய்;
அன்று எனின் - (வாள்) இல்லை என்றால்; அன்றே - அன்றைய தினமே;
இறத்தி - இறந்து போயிருப்பாய்; நோற்ற நோன்பு - மேற்கொண்ட தவம்;
உடைய வாழ் நாள் - பெற்ற ஆயுள்; வரம் - வரம் (ஆகிய); இவை -
இவையும்; நுனித்த எல்லாம் - ஆராய்ந்து பெற்ற பிற யாவும்; கூற்றினுக்கு
அன்றே -
கூற்றுவன் வராமல் தடுக்கவே அல்லாமல்; வீரன் சரத்திற்கும் -
இராமபிரானின் அம்புக்கும்; குறித்தது உண்டோ - (தடையாக)
வரையறுக்கப்பட்டதா ?

    துள்ளுதல் -செருக்குக் கொள்ளுதல். துள்ளும் இருவர்க்கும் (தேவாரம்
91-9) கங்கையை 'வெள்ளம்' என்று திருமுறை பேசும்.
 வெள்ளநீர்ச்
சடையர்போலும் (தேவாரம் 68 - 1) நுனித்தல் - ஆராய்தல். குறித்தல் -
வரையறுத்தல். கணித்தலும் குறித்தலும் - வரையறுத்தற் பொருட்டாமே
(பிங்கலம் 1777)                                         (120)