5189. | 'பெற்றுடைவாளும் நாளும், பிறந்துடை உரனும், பின்னும் மற்றுடை எவையும்,தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை, வில் தொடைஇராமன் கோத்து விடுதலும், விலக்குண்டு, எல்லாம் இற்று இடைந்துஇறுதல் மெய்யே;-விளக்கின் முன் இருள் உண்டாமோ ? |
பெற்றுடை வாளும்நாளும் - நீ பெற்றுள்ள வாளும் ஆயுளும்; பிறந்துடை உரனும் - பிறப்பினால் அமைந்த வலிமையும்; பின்னும் - மேலும்; மற்று உடை எவையும் - வேறு பெற்றுள்ள யாவும்; தந்த - உனக்கு வழங்கிய; மலர் அயன் முதலோர் - மலரில் அமர்ந்த பிரமன் முதலானவர்களின்; வார்த்தை - உறுதிமொழிகள்; இராமன் - இராமபிரான்; வில் - வில்லில்; தொடை கோத்து விடுதலும் - அம்பைத் தொடுத்து விட்டவுடனே; விலக்குண்டு - ஒதுக்கப் பெற்று; எல்லாம் இற்று உடைந்து - எல்லாம் வலிமை குறைந்து தோற்று; இறுதல் மெய்யே - அழிவது உண்மையாகும்; இருள் - இருளானது; விளக்கின் முன் உண்டாமே - விளக்கிற்கு எதிரே நிலைத்து நிற்குமா ? பிறந்துடை உரன்- பிறப்பினால் பெற்ற வலிமை. "பிறந்து நீயுடை தொல்பதம்" (கம்ப. 2475) ''வரம் பெற்றனவும், மற்றுள விஞ்சைகளும் ... உண்மையினோன் சரம் பற்றிய சாபம் விடுந்தனையே" ... என்று சடாயு பேசினான். (கம்ப. 3417) இராமபிரான் திரிசிரா போர்க்கு வந்த போது, "துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான்," என்று பேசப் பெற்றது (கம்ப. 2988) முற்றுடை எவையும் என்பதில் உள்ள மற்று - அசை. தொடை - அம்பு - தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகமே அம்பாம் (சூடா - நிக - செயற்கை 5) (121) |