5191.

' "மலை எடுத்து, எண் திசை காக்கும் மாக்களை
நிலைகெடுத்தேன்" எனும் மாற்றம் நேரும் நீ,
சிலை எடுத்துஇளையவன் நிற்கச் சேர்ந்திலை;
தலை எடுத்து,இன்னமும், மகளிர்த் தாழ்தியோ ?

     மலை எடுத்து -கயிலாயமலையைப் பெயர்த்து; எண்திசை காக்கும்
மாக்களை -
எட்டுத் திக்குகளையும் காக்கும் யானைகளின்; 'நிலை
கெடுத்தேன்' -
உறுதிப் பாட்டை அழித்தேன்; எனும் மாற்றம் - என்கின்ற
மொழியை; நேரும் நீ - கூறிக் கொண்டுள்ள நீ; இளையவன் - இலக்குவன்;
சிலை எடுத்து நிற்க - வில் பற்றி என்னைப் பாதுகாத்து நிற்க (அப்போது);
சேர்ந்திலை - வரவில்லை; தலை எடுத்து - தலைகளைச் சுமந்து; இன்னமும்- மேலும்; மகளிர்த் தாழ்தியோ - பெண்களைக் கும்பிடுகிறாயா?


     மாக்களை - என்பதில் உள்ள 'ஐ' அசை. யானைகளை நிலை கெடுத்தல்
என்று நேரே பொருள் கூறினும் பொருந்தும். நேரும் நீ - பேசும் நீ - நேர்தல்
- பேசுதல். சீர் சடகோபன் நேர்தல் ஆயிரத்து (திருவாய் 1 - 8 -11) மகளிர்த்
தாழ்தியோ - மகளிரால் இழிவுறுவையோ என்றும் கூறலாம். மாக்கள் -
வீரர்கள் என்றும் கூறலாம். மகளிர்த் தாழ்தியோ; பெயரை ஒட்டிய ஒற்று (த்)
பெயரை வேறுபடுத்தும் வேற்றுமையின் பணியைப் புரிகிறது. ஒற்றும்
வேற்றுமை உருபாம் பெயர்ப்பின். இது உரைச் சூத்திரம்.          (123)