5192.

'ஏழை ! நின் ஒளித்துறை இன்னது ஆம் என,
வாழி எம்கோமகன் அறிய வந்த நாள்,
ஆழியும்இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும்திரியும்; உன் உயிரொடு ஓயுமோ?

     ஏழை - அறிவற்றவனே; நின் ஒளித்துறை - உனது மறைந்து வாழும்
இடம்; இன்னது ஆம் என - இந்த இலங்கை யாகும் என்று; எம் கோமகன்
-
எம்முடைய அரசன் (இராமபிரான்); அறிய வந்த நாள் - அறிய
வரும்படியான நாளானது; ஆழியும் இலங்கையும் - கடலும் இலங்கை
மாநகரமும்; அழிய - அழிந்து போவதுடன்; தாழுமோ - தணிந்து போகுமா;
உன் உயிரொடு - உன் உயிரை அழிப்பதுடன்; ஓயுமோ - அமைதி பெறுமா
(அதனால்); ஊழியும் - ஊழிக் காலமும்; திரியும் - மாறுபட்டு அழியும்.

     இப்பாடலில்உள்ள நாள் என்பது எழுவாய். வரும் நாள், வந்த நாள்
என்றது கால மயக்கம்; வருவது உறுதி பற்றி, இங்ஙனம் கூறுதல் தொல் மரபு
(சிந்தாமணி 85) காலமே அனைத்தையும் செய்யும் என்று வாசிட்டம்
விவரிக்கும் (வைராக்கியப் பிரகரணம்) காலத்தை எழுவாயாக்காமல்,
இராமபிரான் சீற்றத்தை வருவித்து அதனை எழுவாயாக்கினர். விரும்பின் ஏற்க.
கோமகனை எழுவாயாக்கி, அவன் கடலும் இலங்கையும் அழிப்பதுடன்
தணிவானா ? உன் உயிரையும் அழிப்பதுடன் ஓய்வானோ (அவனால்)
ஊழித்தீயும் வேகும், என்று வி.கோ. உரை வகுத்தார். இன்னது - இது.
இன்னது கேண்மென இசைத்தல் மேயினார் (கந்தபுரா - 2 - 8 -9) இவ்வினா
அடுத்த பாடலிலும் தொடரும்- குளகம். வாழி - அசை.            (124)