5197. | 'பொற்கணான், தம்பி, என்று இனைய போர்த் தொழில் வில் கொள் நாண் பொருத தோள் அவுணர், வேறு உளார், நற்கண் ஆர் நல்அறம் துறந்த நாளினும், இற்கணார்இறந்திலர்;இறந்து நீங்கினார். |
பொற்கணான்- பொன் மேனியைப் பெற்ற இரணியன்; தம்பி - அவனுடைய தம்பி; என்று - என்று பேசப்பெற்ற; இனைய போர்த் தொழில் - போர்த் தொழிலையும்; வில்கண் நாண் - வில்லின்கண் உள்ள நாண்; பொருத தோள் - மோதும் தோள்களையும் உடைய; அவுணர் - அசுரர்களும்; வேறுளார் - மற்றைய கொடியவர்களும்; நல்கண் ஆர் - நல் அறிவைப் பெற்றவர்கள் (போற்றும்); நல் அறம் - நல்ல தருமத்தை; துறந்த நாளினும் - ஒதுக்கிய காலத்திலும்; இல் - மற்றவன் இல்லாளை; க(ண்)ணார் - கருதி; இறந்திலர் - முறை கடந்திலர்; (அவர் பிற மகளிரைக் காணும் போது) இறந்து - ஒதுங்கி; நீங்கினார் - கடந்து போனார்கள். பொற்கணான் -பொன்னுடல் பெற்றவன் (இரணியன்) கண் - உடல். பொன்கண் பச்சை பைங்கண் மால் என்னும் பரிபாடல் (3.82) பகுதிக்கு உரை வழங்கிய அழகர், சிவந்த உடம்பை உடைய காமனே, என்றும் பசிய உடம்பினை உடைய அநிருத்தனே என்றும் விளக்கினார். நற்கண்ணார் - நல்லறிவு உடையவர். கண் - அறிவு. 'கண் சாய்பவர்' என்னும் குறட்கு (927) அழகர், அறிவு தளர்வார் என்று பொருள் பேசினர். பொற்கணான் என்பதை இரணியாட்சனாக்கி இடர்ப்பட்டு விளக்கம் பேசியதிறம் பாராட்டப்பட வேண்டும். அவர்கள் இரணியன், இளையவன் என்றும், இரணியாட்சன் மூத்தவன் என்றும் பேசினர். அவர்கள் இரட்டைப் பிள்ளைகள் என்றனர். (அடை - பதிப்பு) (129) |