5198.

'பூவிலோன் ஆதியாக, புலன்கள் போம் நெறியில்
                                  போகாத்
தேவரோ,அவுணர்தாமோ, நிலை நின்று வினையின்
                                  தீர்ந்தார் ?
ஏவல் எவ் உலகும்செல்வம் எய்தினார் இசையின்
                                  ஏழாய் !
பாவமோ ? முன்நீ செய்த தருமமோ ? தெரியப்
                                  பாராய் !

     ஏழாய் ! -அறிவில்லாதவனே; இசையின் - உணர்ந்தால்; பூவிலோன்
ஆதியாக -
மலர் வீட்டில் இருக்கும் பிரம்ம தேவனைத் தலைமையாகக்
கொண்டு; புலன்கள் போம் - ஐம்புலன்களும் ஓடுகின்ற; நெறியில் போகா -
தீய வழியில் செல்லாத; தேவரோ - தேவர்களோ; அவுணர்தாமோ -
அசுரர்களோ (எவர்); நிலை நின்று - நிலை பெற்று நின்று; வினையில்
தீர்ந்தார் -
தீவினையிலிருந்து நீங்கியவர்; எவ்வுலகும் - எல்லாவுலகங்களும்;
ஏவல் செல்வம் -
அடிமை செய்யும்படியான செல்வத்தை; எய்தினார் -
பெற்றவர்கள்; முன் நீ செய்த பாவமோ - (உன்னிடத்தில் செல்வம்
உள்ளதென்றால் அதற்குக் காரணம்) முன்பு உன்னால் செய்யப்பெற்ற பாவமா
(அல்லது); தருமமோ - (முன்பு உன்னால் செய்யப்பெற்ற) அறமா; தெரிய -
விளங்கும்படி; பாராய் - ஆராய்வாயாக.

     பூ இல்லோன் -மலரை இல்லமாகப் பெற்ற பிரமன். கமலவீடு (மீனாட்சி
தமிழ் -18)                                                 (130)