இராவணன் சீற்றம் கலித் துறை 5205. | என்று அறத்துறை கேட்டலும், இருபது நயனம் மின் திறப்பனஒத்தன; வெயில் விடு பகு வாய் குன்று இறத்தெழித்து உரப்பின; குறிப்பது என் ? காமத் தின்திறத்தையும் கடந்தது, சீற்றத்தின் தகைமை. |
என்று - என்று பிராட்டிகூறிய; அறத்துறை - அறநெறியை; கேட்டலும் - (இராவணன்) கேட்டவுடனே; இருபது நயனம் - (அவனுடைய) இருபது கண்களும்; மின் திறப்பன ஒத்தன - மின்னல் (மேகத்தை) பிளப்பதை ஒத்திருந்தன; வெயில்விடு பகுவாய் - வெப்பத்தை வெளிப்படுத்தும் பிளந்தவாய்; குன்று இற - மலைகள் இற்றுப் போகும்படி; தெழித்து உரப்பின - முழக்கி அதட்டின; குறிப்பது என் - எப்படிக் குறிப்பிடுவது; சீற்றத்தின் தகைமை - அவனுடைய கோபத்தின் பண்பு; காமத்தின் திறத்தையும் - அவன்பால் முன்பிருந்த காமத்தின் ஆற்றலையும்; கடந்தது - விஞ்சியிருந்தது. அறத்துறை - தருமமார்க்கம். இராவணனின் காமத்தினும் சீற்றம் அதிகமாயிற்று என்பதை சீற்றத்தின் தகைமை காமத்தின் திறத்தையும் கடந்தது, என்பதால் விளக்கப்பட்டது. உள்ளத்தில் உணர்ச்சிகள் மோதுவதை, 'மானமும் சினமும் தாதை மரணமும் ... ஞானமும் துயரும் தம்முள் மலைந்தன நலிந்த' என முன்பு பேசப் பெற்றது (கம்ப. 3542) அடுத்த பாடல் இதனை விளக்கும். இக்கலித்துறை மா - விளம் - விளம் - விளம் - விளம் - மா என்னும் 5 சீர்களைப் பெற்று வரும். இப்பாடல்கள் இந்நூலில் 1223 முறை காட்சி தருகின்றன (மணிமலர் 76) (137) |