அறுசீர்விருத்தம் 5210. | 'கொல்வென் என்று உடன்றேன்; உன்னைக் கொல்கிலென்; குறித்துச் சொன்ன சொல் உள;அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச் சொல்லின், "ஒல்வது ஈது; ஒல்லாதுஈது" என்று, எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ ? வெல்வதும்தோற்றல்தானும் விளையாட்டின் விளைந்த, மேல்நாள். |
உன்னைக்கொல்வென் - உன்னைக் கொன்றுவிடுவேன்; என்று உடன்றேன் - என்று சீற்றம் கொண்டேன்; கொல்கிலேன் - கொல்லமாட்டேன்; குறித்துச் சொன்ன - நீ என் மேல் கூறிய; அவற்றுக்கு எல்லாம் - அந்தக் குற்றங்கட்கு; காரணம் தெரியச் சொல்லின் - காரணத்தை விளங்கக் கூறக் கருதின்; சொல் உள - (அதற்கேற்ற) சொற்கள் உள்ளன; ஈது ஒல்வது - இச் செயல் என்னால் நிறைவேற்றக் கூடியது; ஒல்லாது ஈது - இச் செயல் என்னால் நிறைவேற்ற முடியாதது; என்று ஒன்று - என்று வரையறுத்துக் கூறும் ஒரு செயல்கள்; எனக்கும் - பேராற்றல் படைத்த எனக்கும்; உலகத்து உண்டோ - உலகில் உள்ளதா ? மேல்நாள் - முற்காலத்தில்; வெல்வதும் - (பகைவர்) வெற்றி பெறுவதும்; தோற்றல் தானும்- தோல்வியடைந்ததும்; விளையாட்டின் விளைந்த - விளையாட்டைப் போல நிகழ்ந்தன. தோற்றது,கார்த்த வீரியன் பால் 'நான் விளையாட்டாகத் தோற்றேன், உண்மையில் தோற்கவில்லை'. என்பது இராவணனின் போலிவார்த்தை. (142) |