5211. | 'ஒன்றுகேள், உரைக்க; "நிற்கு ஓர் உயிர் என உரியோன் தன்னைக் கொன்று கோள்இழைத்தால், நீ நின் உயிர் விடின், கூற்றம் கூடும்; என்தன் ஆர்உயிரும் நீங்கும்" என்பதை இயைய எண்ணி, அன்று நான்வஞ்சம் செய்தது; ஆர், எனக்கு அமரில் நேர்வார் ? |
ஒன்று - ஒரு வார்த்தையை;உரைக்க கேள் - யான் கூற நீ கேட்பாயாக; நிற்கு - உனக்கு; ஓர் உயிர் என - ஒப்பற்ற உயிர் போல; உரியோன் தன்னை - உனக்கு உரிமையான இராமனை; கொன்று - கொன்ற பின்; கோள் இழைத்தால் - உன்னைக் கொண்டு வருதலைச் செய்தால்; (அதனால்) நீ நின் உயிர்விடின் - நீ உன் உயிரை விட்டு விட்டால்; கூற்றம் கூடும் - யமன் வருவான் (அதனால்); என்தன்ஆருயிரும் - என்னுடைய அரிய உயிரும்; நீங்கும் - என்னைவிட்டு நீங்கும்; என்பதை - என்னும் உண்மையை; இயைய எண்ணி - பொருந்த ஆராய்ந்து (அதனால்); நான் அன்று - நான் அன்றைய தினம்; வஞ்சம் செய்தது - வஞ்சகம் செய்தது; அமரில் - போரில்; எனக்கு நேர்வார் யார் ? - எனக்குச் சமமானவர் எவர். இராவணன், தன்வஞ்சகச் செயலுக்குக் கூறும் சமாதானம் 'மாயையால் மறைந்து வந்தாய்' என்ற பிராட்டியின் சொல்லுக்கு மாற்றம் (பதில்) கோள் இழைத்தல் - கவர்ந்து வருதல். கொள்ளுதல் என்னும் தொழிற் பெயர் கோள் என நின்றது. முதல் நிலை திரிந்த தொழிற்பெயர். 'குற்றம் கூடும்' - என்னும் பாடமும் உள்ளது. (143) |