5213. | 'வென்றோரும் இருப்ப; யார்க்கும் மேலவர், விளிவு இலாதோர், என்றோரும்இருப்ப; அன்றே, இந்திரன் ஏவல் செய்ய, ஒன்றாக உலகம்மூன்றும் உணர்கின்ற ஒருவன், யானே ! மென்தோளாய் !இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ ? |
மென் தோளாய் !- மெல்லிய தோளையுடையவளே; வென்றோரும் இருப்ப - என்னை வென்ற வாலி முதலானோர் இருக்கவும்; யார்க்கும் மேலவர் - எவர்க்கும் மேலாய மும்மூர்த்திகளும்; விளிவு இலாதோர் என்றோரும் இருப்ப - அழிவற்றவர் என்று பேசப்படும் தேவர்களும் இருக்கவும்; அன்றே - அந்த நாளிலிருந்து; இந்திரன் ஏவல் செய்ய - இந்திரன் அடிமைப் பணி செய்ய; உலகம் மூன்றும் - மூன்று உலகங்களையும்; ஒன்றாக உணர்கின்ற - ஒரு சேர ஆட்சியுணர்வு செய்கின்ற; ஒருவன் - ஒப்பற்றவன்; யானே - யானே ஆவேன் இதற்கு - இவ்வாறு யான் ஆள்வதற்கு வேறு ஓர் காரணம் - பிறிதொரு காரணத்தை; விரிப்பது உண்டா - விளக்கிக் கூறுவதற்குள்ளதா ? என்னினும்மேலானவர் இருப்பின் அவர்கள் என்னை அடக்கியிருக்கலாமே. அவ்வாறு நேராமையின் யானே பெரியவன் என்பது இராவணன் எண்ணம். (145) |