5215. | 'சிற்றியல், சிறுமை ஆற்றல், சிறு தொழில், மனிதரோடே முற்றிய தா இல்வீர முனிவு என்கண் விளையாதேனும், இற்றை, இப்பகலில், நொய்தின், இருவரை ஒரு கையாலே பற்றினென்கொணரும் தன்மை காணுதி;-பழிப்பு இலாதாய் ! |
பழிப்பு இலாதாய்! - பழித்துப் பேசப்படாதவளே ! சிற்றியல் - சிறுமைப் பண்பும்; சிறுமை ஆற்றல் - அற்பசக்தியும்; சிறுதொழில் - இழி தொழிலும் (பெற்ற); மனிதரோடே - மனிதர்கள்பால்; முற்றிய தா இல் வீரம் - முதிர்ந்த குற்றமற்ற வீரத்துடன் கூடிய; முனிவு - கோபம்; என்கண் விளையாதேனும் - என்னிடம் தோன்றாது என்றாலும்; இற்றைஇப்பகலில் - இன்றைய தினத்தில் இந்த முகூர்த்தத்தில்; நொய்தின் - எளிதாக; இருவரை - இராமலக்குவரை; ஒரு கையாலே - ஒரு கையாலே; பற்றினென் கொணருந்தன்மை - பிடித்துக் கொண்டு வரும் என் வலிமையை; காணுதி - பார்ப்பாயாக. மனிதரோடு முனிவுஎன்கண் விளையாது என்று சேர்க்க. பகல் - முகூர்த்தம். பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - என்று குறள் (49) பேசிற்று. இராவணனே பிராட்டியைப் பழிப்பிலாதாய், என்றான். இராவணன், தன்னை மனிதனாக நினைந்ததே இல்லை. மனித குலத்தினும் மேம்பட்டது தன்குலம் என்று பேசுவதை யாண்டும் காணலாம். (147) |