'அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும், வஞ்சியின்செவ்வியாளை வசித்து, என்பால் வருவீர்; அன்றேல், நஞ்சு உமக்குஆவென்' என்னா, நகை இலா முகத்து, பேழ் வாய், வெஞ்சினத்துஅரக்கிமார்க்கு, வேறு வேறு உணர்த்திப் போனான்.*
(இராவணன்)
வஞ்சியின்செவ்வியாளை - வஞ்சிக் கொடியைவிட மென்மை வாய்ந்தசீதையை; ஒன்றால் - ஒரு உபாயத்தால்; அஞ்சுவித்தானும் - அச்சமடையச்செய்தாவது (அன்றேல்); ஒன்றால் - வேறு ஒரு உபாயத்தால்; அறிவுறத்தேற்றியானும் - அறிவில் பொருந்தும்படியாகத் தெளிவை உண்டாக்கியாவது;வசி்த்து - வசப்படுத்தி (பிறகு); என்பால் வருவீர் -என்னிடத்தில் வருவீராக;அன்றேல் - அவ்வாறு செய்யாமற் போனால்; உமக்கு நஞ்சு ஆவென் -உங்கட்கு நான் விடம் ஆவேன்; என்னா - என்று; நகையிலா முகத்து -சிரிப்பறியா முகத்தையும்; பேழ்வாய் - பிளந்த வாயையும்; வெஞ்சினத்து -கொடுங் கோபமும் (பெற்ற); அரக்கிமார்க்கு - அரக்கிகட்கு; வேறு வேறு -தனித்தனியாக; உணர்த்திப் போனான் - அறிவுறுத்திச் சென்றான்.
வசித்து -வசப்படுத்தல். தன்னால் முடியாததைத் தன் பணிப் பெண்கள்முடிப்பர் என்று நினைத்த இராவணனின் அறியாமை பெரிது. ஆசை அறிவைஅழிக்கும். (151)