5223. | 'மண்ணில்தீய மானுயர் தத்தம் வழியோடும், பெண்ணில்தீயோய் ! நின் முதல் மாயும் பிணி செய்தாய், புண்ணில்கோல் இட்டாலன சொல்லி; பொது நோக்காது எண்ணிக்காணாய், மெய்ம்மையும்' என்றார், சிலர் எல்லாம். |
சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; பெண்ணில் தீயோய் - பெண்களுக்குள் தீயவளே; புண்ணில் கோலிட்டாலன - புண்ணிலே அம்பை ஏவினாற்போல; சொல்லி - கொடிய வார்த்தைகளைப் பேசி; நின்முதல் - உன் காரணமாக; தீய மானுயர் - தீய இராமலக்குவர்கள்; தத்தம் வழியோடும் - தங்கள் தங்கள் மரபுடன்; மண்ணில் - பூமியில்; மாயும் பிணிசெய்தாய் - அழிவதற்கு ஏதுவான நோயை உண்டு பண்ணினாய்; பொதுநோக்காது - எல்லோரையும் சமமாகப் பாராமல்; எண்ணி - (சிறப்புற)ஆராய்ந்து; மெய்ம்மையை - உண்மையை; காணாய் - பார்ப்பாயாக;என்றார் - என்று கூறினர். வழி - மரபு.முதல் - காரணம். எண்ணில் காணாய் - என்று பாடங்கொண்டு பொது நோக்காது எண்ணில் மெய்ம்மை காணாய் என்று கூட்டி, பொதுவாகப் பாராமல் எண்ணினால் மெய்ம்மையைக் காணமாட்டாய் என்று உரை கூறினும் ஏற்கும் - பாரபட்சம் பாராதே என்று அறிவுறுத்துகிறார்கள். (155) |