5224. | 'புக்க வழிக்கும், போந்த வழிக்கும், புகை வெந் தீ ஒக்கவிதைப்பான் உற்றனை அன்றோ ? உணர்வு இல்லாய் ! இக் கணம்இற்றாய்; உன் இனம் எல்லாம் இனி வாழா; சிக்க உரைத்தேம்' என்று தெழித்தார், சிலர் எல்லாம். |
சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; உணர்வு இல்லாய் - அறிவற்றவளே (நீ); புக்க வழிக்கும் - புகுந்த கணவன் மரபுக்கும்; போந்த வழிக்கும் - பிறந்த தந்தை மரபுக்கும்; புகை வெந்தீ - புகையுடன் கூடிய நெருப்பை; ஒக்க - ஒருசேர ; விதைப்பான் உற்றனை அன்றோ - அள்ளித் தெளிக்க வந்துள்ளாய் அல்லவா; இக்கணம் இற்றாய் - நீ இப்பொழுதே அழிந்தாய்; உன் இனம் எல்லாம் - உன் கூட்டம் முழுவதும்; இனி வாழா - இனிமேல் வாழப்போவதில்லை; சிக்க உரைத்தேம் - உறுதியாகச் சொன்னோம்; என்று தெழித்தார் - என்று கூறி அதட்டினர். புக்கவழி - புகுந்த மரபு (தசரதன் மரபு) போந்த வழி -பிறந்த மரபு (சனகன் மரபு) சிக்க - உறுதியாக. அரக்கர் இயல்பு தெழித்துப் பேசுதல் போலும். நாவரசர், இராவணனை திண்ணமாத் தெழித்து நோக்கி உணரா ஆண்மையான், என்று இராவணப் பதிகத்தில் பேசுவார் (தேவாரம் 34). (156) |