சீதையின் துயரமொழிகள்.

5229.

துஞ்சா தாரும் துஞ்சுதல் கண்டாள்; துயர் ஆற்றாள்;
நெஞ்சால்ஒன்றும் உய் வழி காணாள்,
                             நெகுகின்றாள்;
அஞ்சாநின்றாள்,பல் நெடு நாளும் அழிவுற்றாள்,
எஞ்சா அன்பால்,இன்ன பகர்ந்து, ஆங்கு, இடர்
                              உற்றாள்.

     பல்நெடுநாளும்அழிவுற்றாள் - பலநாட்கள் துன்புற்றபிராட்டி;
துஞ்சாதாரும் - உறங்காத அரக்கிமார்கள்; துஞ்சுதல் கண்டாள் -
உறங்குவதைப் பார்த்து; துயர் ஆற்றாள் - துன்பத்தைப் பொறுக்க முடியாமல்;
நெஞ்சால் - உள்ளத்தால்; உய்வழி - தப்பிச் செல்லும் வழி; ஒன்றும்
காணாள் -
சிறிதும் அறியாமல்; நெகுகின்றாள் - மனம் நெகிழ்ந்து; அஞ்சா
நின்றாள் -
பயமடைந்து; எஞ்சா அன்பால் - குறையாத அன்புடன்; இன்ன
பகர்ந்து -
இவற்றைக்கூறி; ஆங்கு இடர் உற்றாள் - அங்கே துன்பம்
அடைந்தாள்; பகர்தல் - மனத்துடன் பேசுதல்.

    பிராட்டி,உறங்காத அரக்கிகள் உறங்குவதைப் பார்த்து வழியறியாமல்
இவற்றைக் கூறித் துன்புற்றாள். கண்டாள், ஆற்றாள், காணாள், நெகுகின்றாள்
முதலிய முற்றுக்கள் எச்சப் பொருளில் வந்தன. அழிவுறுவாள் - என்னும்
வினையாலணையும் பெயர் எழுவாய். துஞ்சுதல் - உறங்குதல்.         (2)