கலி விருத்தம்

5230.

கரு மேகம்,நெடுங் கடல், கா அனையான்
தருமே, தனியேன்எனது ஆர் உயிர்தான் ?
உரும்ஏறு உறழ்வெஞ் சிலை நாண் ஒலிதான்
வருமே ? உரையாய், வலியார் வலியே !

     வலியார் வலியே- வலிமைமிகுந்த இராமலக்குவர்பால் உள்ள
வலிமையே!; கருமேகம் - கருத்த மேகமும்; நெடுங்கடல் - நெடுங்கடலும்;
கா - சோலையும்; அனையான் - ஒத்த இராமபிரான்; தனியேன் -
தனித்திருக்கும்; எனது ஆருயிர் - எனது (ஆருயிரை) அரிய உயிரை;
தருமே -
எனக்குத் தருவாரா ?; உரும் ஏறு உறழ் - பேரிடி போன்ற;
வெஞ்சிலை நாண் ஒலி -
கொடிய வில்லி்ன் ஒலியானது; வருமே -
இலங்கைக்கு வருமா; உரையாய் - கூறுக.

    இராமபிரானுக்குமேகம் முதலானவை உவமை. ஆழ்வார், கற்பகக்
காவன நற்பெருந் தோளற்கு (திருவாய் 6.6.6) என்றார். அதைப்பின்பற்றி
இராமபிரானைக் 'கா' என்றார். தேசிகன், இராமபிரானை, 'நடையாடும்
பாரிசாதம்' என்று ரகுவீரகத்தியத்தில் பேசினார் (தண்டகா தபோவந ஐங்கம
பாரிஜாத) ஆருயிர்தான் ஒலிதான் - தான் உரை அசை. வலியார் விதியே -
என்னும் பாடம் ஒதுக்கப்பட்டது. இராமனின் வில்லை நம்பியிருக்கும் பிராட்டி,
விதியை அழைத்துப் பேசாள் என்பது சிலருடைய கருத்தாக இருக்கும்.
இவ்விருத்தம் மா - புளிமா - புளிமா - புளிமா - என்னும் நான்கு சீர்களைப்
பெற்று வரும். இப்பாடல் நேரசையில் தொடங்கினால் 11
எழுத்தையும்
நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தையும் பெற்றுவரும்.
இப்பாடல்கள் இந்நூலில் 212 இடங்களில் காட்சி தருகின்றன.          (3)