5231. | 'கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே ! செல்லா இரவே !சிறுகா இருளே ! எல்லாம் எனையேமுனிவீர்; நினையா வில்லாளனை,யாதும் விளித்திலிரோ ? + |
கல்லா மதியே -(நன்மையைப்) பயின்று அறியாத சந்திரனே; கதிர்வாள் நிலவே - சூரியனின் ஒளியைப் பெற்ற நிலவே; செல்லா இரவே - கழியாத இராக்காலமே; சிறுகா இருளே - குறைவற்ற இருளே; எல்லாம் - நீங்கள் யாவரும்; எனையே முனிவீர் - தனித்துள்ள என்னையே சீறுகிறீர்; நினையா - என்னைக் கருதிப்பாராத; வில்லாளனை - வில்லேந்திய இராமபிரானை; யாதும் விளித்திலிர் - சிறிதும் கோபிக்கமாட்டீர். கல்லா - பயிலாதகல்லாமதியே என்பதில் உள்ள 'கல்லா' என்பதை செய்யா என்னும் வாய்ப்பாட்டெச்சமாக்கிக் 'கற்றமதியே' எனப் பொருள் கோடலும் நன்று. கல்லா இளைஞர்(பொருநர் - ஆற்றுப்படை 100) என்னும் தொடருக்கு இனியர் 'முற்றக் கற்ற இளையர்' என்று பொருள் கூறினர். கல்லா என்பது செய்யா என்னும் எச்சம் என்றார். கற்ற சந்திரன், இப்படிச் செய்யலாமா என்றால் பொருள் சிறக்கும். மதியின் கல்வியைப் பற்றிப் பேச வேண்டா. அவன் வில்லைக்கண்டு அஞ்சினிரோ என்று குறிப்பிடுகின்றாள். இதுவும் அடுத்த பாடலும் ஒரு தொடர். ஓ. அசை. (4) |